“இன்ஸ்டாகிராம் காதலால் வந்த வினை!”.. பெண்ணின் வற்புறுத்தலால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!
Instagram Romance Tragic Turn: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே இன்ஸ்டாகிராம் காதலியின் வற்புறுத்தல் மற்றும் தொடர் மிரட்டல்களால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இளைஞரின் மரணம் தொடர்பாகக் காவல்துறை விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, நவ.07: இன்றைய நவீன காலத்தில் சமூக வலைதளங்கள் மனிதர்களை இணைக்கும் பாலமாக விளங்குவதுடன், பல நேரங்களில் எதிர்பாராத விபரீதங்களுக்கும் வழிவகுத்து விடுகின்றன. அந்த வகையில், இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நேர்ந்த ஒரு துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரணியல் அருகிலுள்ள கட்டிமாங்கோடு பகுதியைச் சேர்ந்த 25 வயதான கொத்தனார் அருள்ராஜ் என்பவரும், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பண்டாரவிளையைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் குறித்த விவரங்கள் பெண்ணின் வீட்டிற்குத் தெரியவந்த நிலையில், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் தொடர் அழுத்தங்கள் காரணமாக அந்த இளைஞர் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: மத்திய – மாநில உறவுகள் ஆய்வுக்குச் செக்.. நீதிபதி குரியன் ஜோசப் குழுவை திடீரென கலைத்தது தமிழக அரசு!
பெண்ணின் தாயார் அளித்த புகார்:
சம்பவத்தன்று இரவு அருள்ராஜைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த கல்லூரி மாணவி, தன்னை உடனடியாக அழைத்துக்கொண்டு வெளியூருக்குச் சென்றுவிடுமாறு வற்புறுத்தியதாகவும், இல்லாவிட்டால் கையை அறுத்துக்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்வேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன அருள்ராஜ், தனது காதலியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மாணவி தனது தாயாரின் வங்கி கணக்கில் இருந்த 15,000 ரூபாயை எடுத்துக்கொண்டு இரவோடு இரவாகக் காதலனுடன் வெளியே தங்கியதாகத் தெரிகிறது. இதற்கிடையில், காலையில் தனது மகளையும் காணவில்லை, பணத்தையும் காணவில்லை எனத் தேடிய மாணவியின் தாயார் மினி, இரணியல் காவல் நிலையத்தில் தனது மகள் கடத்தப்பட்டதாகப் புகாரளித்துள்ளார். பின்னர் அருள்ராஜ் அந்த மாணவியை அவரது வீட்டிலேயே கொண்டுபோய் பாதுகாப்பாக விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
விசாரணை என்ற பெயரில் நடந்த மிரட்டல்:
கல்லூரி மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்குச் சென்ற இரணியல் காவல் துறையினர், முறையான சி.எஸ்.ஆர் (CSR) பதிவு செய்யாமல் அருள்ராஜின் வீட்டிற்குச் சென்று அவரது பெற்றோர்களை மிரட்டியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி, அருள்ராஜின் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தைப் பலவந்தமாகப் பறித்துச் சென்றதோடு, வழக்கு பதிவு செய்துவிடுவோம் என மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் வழக்கறிஞர் எனக் கூறி ஒரு பெண்ணும், மாணவியின் குடும்பத்தினரும் அருள்ராஜைத் தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளனர். எங்கு பார்த்தாலும் தன் மீது பழிவரும் என்ற கடும் மன உளைச்சலிலும் பயத்திலும் மூழ்கிய அருள்ராஜ், கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நைலான் கயிறால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படிக்க: “19 மாநில போதை மாஃபியாவுக்கு செக்!”.. ‘ஆபரேஷன் டீப் சோர்ஸ்’ மூலம் நெட்வொர்க்கை தகர்த்த தமிழக காவல்துறை!
பிரேத பரிசோதனையும் உறவினர்களின் சோகமும்:
தகவலறிந்து விரைந்து வந்த இரணியல் போலீசார், அருள்ராஜின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலியின் தீவிர வற்புறுத்தல், காவல் துறையினர் மற்றும் பெண்ணின் தரப்பினரின் தொடர் மிரட்டல்கள்தான் இந்த விபரீத முடிவுக்குக் காரணம் எனக் கூறி அருள்ராஜின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீதும் முறையற்ற வகையில் நடந்து கொண்டவர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.