“விஜய் ஆட்சிக்கு எதிரான முதல் அடி” – மதுராந்தகம் களத்தில் உதயநிதி ஸ்டாலின்..
Udhayanidhi Stalin Speech: மதுராந்தகம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். முதல்வரும் தவெக தலைவருமான விஜய் செப்டம்பர் 28-ம் தேதி மதுராந்தகத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செப்டம்பர் 21, 2026: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் இளைஞர் அணிச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
தேர்தலுக்கு இன்னும் 16 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகியதால் இடைத்தேர்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட உதயநிதி, மக்கள் வாக்களித்து வழங்கிய பதவியை குறுகிய காலத்திலேயே ராஜினாமா செய்தது தொகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று விமர்சித்தார்.
விஜய் அரசுக்கு எதிராக கடும் விமர்சனம்
முதல்வர் விஜய் தலைமையிலான தற்போதைய ஆட்சி குறித்து விமர்சித்த உதயநிதி, ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பினார். சட்டம்-ஒழுங்கு, விலைவாசி உயர்வு, பெண்களின் பாதுகாப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவகாரங்களிலும் அரசை அவர் விமர்சித்தார்.
சட்டப்பேரவையில் அமைச்சர்கள் கேள்விகளுக்கு உரிய முறையில் பதிலளிப்பதில்லை என்றும், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலாக முந்தைய தி.மு.க. ஆட்சியைப் பற்றி பேசுவதாகவும் குற்றம்சாட்டினார். தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து புதிய திட்டங்களாக அரசு அறிவிப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் படிக்க: 13 வயது சிறுமிகள், பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. வீரமணி வழக்கில் கைமாறிய ரூ. 10 கோடி.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்..
மதுராந்தகத்தில் விஜய்யின் பிரசாரம்:
மதுராந்தகம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். முதல்வரும் தவெக தலைவருமான விஜய் செப்டம்பர் 28-ம் தேதி மதுராந்தகத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், மதுராந்தகம் இடைத்தேர்தல் தற்போதைய தவெக ஆட்சிக்கு எதிரான தி.மு.க.வின் முதல் அரசியல் நடவடிக்கையாக அமையும் வகையில் செயல்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார். இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
வீடு வீடாக பிரசாரம்:
மதுராந்தகம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் இலக்காகக் கொண்டு நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என்று உதயநிதி கூறினார். ஒவ்வொரு குடும்பத்தையும் நேரடியாகச் சந்தித்து தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும் என்றும், குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்களால் பயனடைந்தவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
முதலில் கட்சி நிர்வாகிகள் தங்கள் குடும்பத்தினரிடமே தேர்தல் குறித்து பேச வேண்டும் என்றும், அதன்பிறகு வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் படிக்க: ரூ.50 கோடி மதிப்பிலான காசோலைகள் மோசடி முயற்சி? நடிகை அம்பிகா, சகோதரர் மீது நடிகை ராதா பரபரப்பு புகார்
இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்பு:
மதுராந்தகம் தொகுதியில் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் இளம் பேச்சாளர்களை ஒருங்கிணைத்து தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், சமூக வலைதளங்களிலும் பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் உதயநிதி தெரிவித்தார். சிறிய கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, தேர்தல் முடியும் வரை ஒரே இலக்குடன் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவு அடுத்தகட்ட அரசியல் மாற்றத்துக்கான தொடக்கமாக அமையும் என்று தெரிவித்தார்.