13 வயது சிறுமிகள், பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. வீரமணி வழக்கில் கைமாறிய ரூ. 10 கோடி.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்..
Veeramani Case: ஏற்கனவே வீரமணியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து புழல் சிறையிலேயே விசாரணை நடத்தப்பட்டது. அடுத்தகட்டமாக, அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படும் மகேந்திரசிம்மன் மற்றும் சாந்தி ஆகியோரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
செப்டம்பர் 21, 2026: சென்னையில் 13 வயது சிறுமி உட்பட பல சிறுமிகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏழை சிறுமிகள் மற்றும் பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறியும், கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறியும் அவர்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பங்களா எடுத்து பாலியல் வன்கொடுமை?
சென்னையில் இதற்காக தனியாக பங்களா எடுத்து, மகேந்திரசிம்மன் மற்றும் சாந்தி ஆகியோர் வீரமணிக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறுமிகள் மற்றும் பெண்களை பல்வேறு உல்லாச விடுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க விசாரிக்க பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு முதல் பல சிறுமிகள் மற்றும் பெண்களை இதேபோன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, அதனை வீடியோவாக பதிவு செய்து பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், 2003-ம் ஆண்டிலும் இதேபோன்ற ஒரு வழக்கில் சிக்கியதாகவும், அந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 2003-ம் ஆண்டுக்கு முந்தைய காலத்திலும் பல பெண்கள் இதேபோன்று பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் பணி தீவிரம்
இதுவரை கிடைத்துள்ள வீடியோக்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ள நிலையில், மேலும் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. பிற மாவட்டங்களில் எப்படி? வானிலை ரிப்போர்ட்..
உடந்தையாக இருந்தவர்களிடம் விசாரணை
ஏற்கனவே வீரமணியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து புழல் சிறையிலேயே விசாரணை நடத்தப்பட்டது. அடுத்தகட்டமாக, அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படும் மகேந்திரசிம்மன் மற்றும் சாந்தி ஆகியோரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
அதிகாரிகள் மீது லஞ்சப் புகார்
இதனிடையே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர் அதிகாரிகளின் துணையுடன் மூடி மறைக்க முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை பணம் கைமாறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் படிக்க: ரூ.50 கோடி மதிப்பிலான காசோலைகள் மோசடி முயற்சி? நடிகை அம்பிகா, சகோதரர் மீது நடிகை ராதா பரபரப்பு புகார்
இதையடுத்து, லஞ்சப் பணம் கைமாறிய விதம், பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.