கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் முறைக்கேடு – ஆராய்ச்சி மாணவர்கள் குற்றச்சாட்டு
Kalaignar Centenary Library : கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் வாங்கி முறைக்கேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கோவை பெரியார் அறிவுலக புத்தகங்கள் மட்டுமின்றி, கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் முறைகேடு நடந்திருப்பதாக ஆராய்ச்சி மாணவர்கள் குற்றச்சாட்டி உள்ளனர். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கோவை, நவம்பர் 7 : கோவையில் பெரியார் அறிவுலகத்தில் போலியான நூல்கள் வாங்கி முறைக்கேடு நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்து. இதற்கிடையில் கோவை பெரியார் அறிவுலகத்தில் (Periyar Arivulagam) புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, இது குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆராய்ச்சி மாணவர்களாக பிரேம்குமார் மற்றும் சதீஷ் ஆகியோர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் முறைக்கேடு
தமிழில் முனைவர் பட்டம் பயின்று வரும் தாங்கள், ஆய்வுக்காகத் தகவல்களைச் சேகரிக்க பெரியார் அறிவுலகத்திற்குச் சென்றபோது, அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களைச் சேர்ந்த ஏராளமான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறினர். அந்தப் புத்தகங்களை ஆய்வு செய்தபோது தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்ததுடன், புத்தகங்களின் நம்பகத்தன்மை குறித்தும் சந்தேகம் எழுந்ததாகத் தெரிவித்தனர். இதுதொடர்பான ஆதாரங்களைத் திரட்டியுள்ளதாகவும் கூறினர்.
இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: தீபாவளியன்று இந்த 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – எங்கெல்லாம் தெரியுமா?




தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் ஆங்கில நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் குற்றம்சாட்டினர். தேன்மொழி என்பவரின் பெயரில் மூன்றே நாட்களில் 100-க்கும் மேற்பட்ட நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ISBN எண்கள் மற்றும் நூலகத் துறையின் கொள்முதல் பட்டியலை ஒப்பிட்டுப் பார்த்தபோது பல்வேறு முரண்பாடுகள் தெரியவந்ததாகவும் தெரிவித்தனர்.
குறிப்பாக, ஒரே ISBN எண்ணில் வெவ்வேறு எழுத்தாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், வெளிநாட்டு எழுத்தாளர்களின் பெயர்களில் ஆங்கில அறிவியல் நூல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர். மேலும், அந்த எழுத்தாளர்கள் உண்மையான நபர்கள் அல்ல என்றும், புத்தகங்களின் உள்ளடக்கங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தங்களது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதற்கான சான்றுகளையும் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
பெரியார் அறிவுலகத்தில் மட்டுமின்றி, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள புத்தகங்களையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியான விவாதங்கள் தங்களுக்குத் தேவையில்லை என்றும், ஆதாரங்களின் அடிப்படையில் உண்மைகளை வெளிப்படுத்துவதே தங்களது நோக்கம் என்றும் கூறினர்.
இதையும் படிக்க : மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
தாங்கள் சேகரித்த தகவல்களை எழுத்தாளர் பெருமாள் முருகனிடம் தெரிவித்ததாகவும், அதன் அடிப்படையிலேயே அவர் இந்த விவகாரம் தொடர்பாகக் கட்டுரை எழுதியதாகவும் பிரேம்குமார் தெரிவித்தார். ஆராய்ச்சி மாணவர்கள் என்பதால் நேரடியாக இந்த விவகாரத்தை வெளிப்படுத்துவதில் அச்சம் இருந்ததாகவும், இது அரசியல் காழ்ப்புணர்ச்சியாகப் பார்க்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே பெருமாள் முருகன் போன்ற எழுத்தாளுமை மிக்கவர் மூலம் இந்த விவகாரத்தை வெளிக்கொண்டு வந்ததாகவும் கூறினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கல்வித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து, தாங்கள் சேகரித்த ஆவணங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர்.