சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம் – 800 பேருக்கு வேலை வாய்ப்பு – முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்
Starbucks Chennai Investment Deal : சென்னையில் தனது உலகளாவிய திறன் மையத்தை அமைப்பதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் விஜய் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செப்டம்பர் 21, 2026 நேற்று கையெழுத்தானது.
சென்னை, செப்டம்பர் 22 : சென்னையில் தனது உலகளாவிய திறன் மையத்தை அமைப்பதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் விஜய் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செப்டம்பர் 21, 2026 நேற்று கையெழுத்தானது. இதன் மூலம் 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு அதிக சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஸ்டார்பக்ஸ் உலகளாவிய திறன் மையம்
இதற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனமும், ஸ்டார்பக்ஸ் நிறுவனமும் இணைந்து கையெழுத்திட்டுள்ளன. இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அமைக்க உள்ள முதல் உலகளாவிய திறன் மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.. இதன் மூலம் தொழில்நுட்பம் மற்றும் வணிக சேவைகள் தொடர்பான பணிகள் சென்னையில் இருந்து மேற்கொள்ளப்பட உள்ளன.




இதையும் படிக்க : “விஜய் ஆட்சிக்கு எதிரான முதல் அடி” – மதுராந்தகம் களத்தில் உதயநிதி ஸ்டாலின்..
இதுகுறித்து பேசிய முதல்வர் விஜய், ஸ்டார்பக்ஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனம் சென்னையைத் தேர்வு செய்திருப்பது தமிழகத்திற்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம் என்றும் தமிழக இளைஞர்களின் திறமை மீது சர்வதேச நிறுவனங்கள் வைத்துள்ள நம்பிக்கையை இந்த முதலீடு வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். மேலும், உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை ஈர்ப்பதற்கு தமிழகத்தின் கட்டமைப்பும் திறமையான மனிதவளமும் வலுவாக இருப்பதை இது எடுத்துக்காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ் காபி (STARBUCKS COFFEE) நிறுவனம், 800 தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உயர் ஊதிய வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் உலகளாவிய திறன் மையம் (Global Capability Centre – GCC) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
மாண்புமிகு தமிழ்நாடு… pic.twitter.com/57ZGvq3IAp— TN DIPR (@TNDIPRNEWS) September 21, 2026
இதன் ஒரு பகுதியாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் ஆனந்த் வரதராஜன், இந்தியாவை தங்கள் நிறுவனத்தின் முக்கிய சந்தையாக கருதுவதாக தெரிவித்தார். குறிப்பாக, சென்னையில் உள்ள திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் தமிழக அரசின் ஆதரவு ஆகியவை இந்த மையத்தை அமைப்பதற்கான முக்கிய காரணங்களாக இருப்பதாக அவர் கூறினார்.
இதையும் படிக்க : மதுராந்தகத்தில் ஆட்டோ ஓட்டி, டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்!
இந்த புதிய மையம் மூலம் தொழில்நுட்பம் சார்ந்த புதிய தீர்வுகளை உருவாக்குவதுடன், நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளுக்கும் கூடுதல் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் உலகளாவிய திறன் மையங்களின் வரிசையில் ஸ்டார்பக்ஸ் இணைவது, சென்னையின் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கும் மேலும் ஊக்கம் அளிக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் எஸ்.கீர்த்தனா, தலைமைச் செயலர் சாய்குமார், தொழில் துறை செயலர் எஸ்.விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.