மகளிருக்கான வெற்றி பயணம் திட்டம்.. எப்போது தொடங்குகிறது தெரியுமா? வெளியான சூப்பர் அறிவிப்பு!
Vetri Payanam Trial Run : தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வெற்றி பயணம் திட்டதின் சோதனை ஓட்டம் வருகிற செப்டம்பர் 27- ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், அக்டோபர் 2- ஆம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ளும் வெற்றிப் பயணம் என்ற திட்டம் வருகிற அக்டோபர் 2- ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான சோதனை ஓட்டம் வருகிற செப்டம்பர் 27- ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 7 அரசு பொது போக்குவரத்து கழகங்களில் நகர சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கிலோ மீட்டர் வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். தற்போது வெற்றி பயணத் திட்டத்தின் மூலமாக இந்த சேவை மாநகர மற்றும் நகர பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல். எஸ். எஸ், மற்றும் டீலக்ஸ் ஆகிய அரசு பேருந்துகள் மற்றும் புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகள் ஆகியவற்றுக்கு விரிவு படுத்தப்பட உள்ளது.
வெற்றி பயண திட்டத்தின் கீழ் 84.32 லட்சம் பெண்கள் பயணிப்பர்
அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் சுமார் 12,692 பேருந்துகள் கொண்டுவரப்பட உள்ளன. இதன் வாயிலாக 7 அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மொத்தம் 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 84.32 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயணம் மேற்கொள்வார்கள். வெற்றி பயணம் பேருந்துகளின் மின்னணு பயண சீட்டுகள் இயந்திரங்களுடனான இணைப்பு பணி முடிவடைந்துள்ளது.
மேலும் படிக்க: திருச்செந்தூரில் பயங்கரம்.. நடுரோட்டில் 2 ஆட்டோ ஓட்டுநர்கள் அரிவாள் மோதல்.. அலறியடித்து ஓடிய மக்கள்!




செப்டம்பர் 25, 27- இல் சோதனை ஓட்டம்- சரிபார்ப்பு
இதற்கான சோதனை ஓட்டம் மற்றும் சரிபார்ப்பு பணிகள் வருகிற 25- ஆம் தேதிக்குள்ளும், சோதனை ஓட்டம் 27- ஆம் தேதியும் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டத்தை அக்டோபர் 2- ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாள் அன்று முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின் வாயிலாக தமிழகம் முழுவதும் பெண்கள் எளிதில் அணுகக் கூடிய பொது போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்வி நிலையங்களுக்கு சென்று வரவும்,
மகளிர் பயணம் திட்டம் விரிவாக்கம்
பெண்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு கட்டணம் இன்றி பேருந்துகளில் பயணிக்கவும் முடியும். திமுக ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட மகளிர் விடியல் பேருந்து பயண திட்டத்தை மகளிர் பயணம் என மாற்றிய தவெக அரசு அதனை அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் என அறிமுகம் செய்து விரிவுபடுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “கனிமொழி ராஜாத்தி கருணாநிதி” திடீர் பெயர் மாற்றத்திற்கு இதுதான் காரணமா? நெகிழ்ச்சி பின்னணி!