திருச்செந்தூரில் பயங்கரம்.. நடுரோட்டில் 2 ஆட்டோ ஓட்டுநர்கள் அரிவாள் மோதல்.. அலறியடித்து ஓடிய மக்கள்!
Tiruchendur Auto Drivers Clash : தூத்துக்குடி மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வதில் ஏற்பட்ட தகராறில் இரு ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்ட நிலையில், இருவரும் அரிவாளால் ஒருவரையொருவர் மாறி மாறி வெட்டிக் கொண்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த முருகன் ( 51 வயது). இவர், திருச்செந்தூர் முருகன் கோவில் வாசல் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுகிறார். இதே போல, ஆறுமுகநேரி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாதவன் தினேஷ் ( 26 வயது). இவரும், திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ இயக்கி வருகிறார். இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுனர் தினேஷ், தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அவர்களை திருச்செந்தூர் முருகன் கோவில் வாசல் அருகே இறக்கி விட்டார். அப்போது, அந்தப் பகுதியில் இருந்து சிலர் இவரது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட முயன்றார். அப்போது, கோவில் வாசல் ஆட்டோ ஸ்டாண்ட்டில் பணிபுரியும் ஆட்டோ ஓட்டுநர்கள் தினேஷை சூழ்ந்து கொண்டு திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆட்டோ ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள்
அப்போது, கோவில் வாசலில் இருந்து பொதுமக்களை ஏற்றி செல்வதால் தங்களுக்கு வாடகை பாதிக்கப்படுவதாக கூறி, தினேஷை ஆனந்த முருகன் உள்ளிட்டோர் கண்டித்துள்ளனர். இதில், தினேஷுக்கும், ஆனந்த முருகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆனந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த அறிவாளை எடுத்து மாதவன் தினேஷை சரமாரியாக வெட்டி உள்ளார். இந்த சம்பவத்தை பார்த்த பக்தர்கள் அங்கிருந்து அச்சத்தில் தெறித்து ஓடினர். இதேபோல, ஆட்டோவில் இருந்த பயணிகளும் அங்கிருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
மேலும் படிக்க: தருமபுரி அருகே பயங்கரம்.. மண்சரிவில் உருண்ட பாறை ரயில் மீது மோதி விபத்து.. ஓட்டுநரின் திறமையால் தப்பிய பயணிகள்!!




அரிவாளால் வெட்டிக் கொண்ட ஓட்டுநர்கள்
அப்போது, சுதாரித்துக் கொண்ட மாதவன் தினேஷ் அரிவாளை பிடுங்கி ஆனந்த முருகனை வெட்டினார். இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனே, அருகில் இருந்த சக ஆட்டோ ஓட்டுநர்கள் அவர்கள் இருவரையும் விலக்கி விட்டதுடன், மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, இருவருக்கும் மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, தீவிர சிகிச்சைக்காக ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த முருகன் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு ஓட்டுனர் மாதவன் தினேஷ் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்செந்தூர் போலீசார் விசாரணை
அங்கு, இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் சன்னதி அருகே பக்தர்கள் மத்தியில் இரு ஆட்டோ ஓட்டுநர்கள் அரிவாளாள் கொடூரமாக தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: சிவகங்கை இரட்டைக் கொலை சம்பவம்.. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணை!