சிவகங்கை இரட்டைக் கொலை சம்பவம்.. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணை!
Sivagangai Double Murder Case: சிவகங்கை அருகே கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் தற்காலிகப் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கியுள்ளார். உயிரிழந்த பூப்பாண்டியனின் சகோதரி மற்றும் தெய்வேந்திரனின் சகோதரருக்கு சுகாதாரத் துறையில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்களாகத் தற்காலிக வேலை வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை, செப்.20: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் கடந்த 16-ஆம் தேதி பூப்பாண்டியன் மற்றும் தெய்வேந்திரன் ஆகிய இருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறை தரப்பில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அப்பகுதி பொதுமக்களும் கடந்த மூன்று நாட்களாக உடல்களை வாங்க மறுத்துத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிக்க: “செலவு ரூ.1.38 லட்சம் கோடி.. வருவாய் பற்றாக்குறை ரூ.20,340 கோடி!”.. வெளியான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை!!
மூன்று நாட்கள் தொடர் போராட்டம்:
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் முதற்கட்டமாகச் சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியிலும், இரண்டாம் கட்டமாகக் காளையார்கோவிலிலும் சாலை மறியல் போராட்டங்களை நடத்தினர். தொடர்ந்து மூன்றாவது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது, தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள்பட்டி விலக்கு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்பின்னர், நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய உறவினர்கள், தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அரசுப் பணி நியமன ஆணை வழக்கம்:
மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி, மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவின் பேரில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து உயிரிழந்த பூப்பாண்டியனின் சகோதரி மற்றும் தெய்வேந்திரனின் சகோதரருக்கு சுகாதாரத் துறையின் கீழ் தற்காலிக டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அரசுப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, உடற்கூறாய்வுப் பணிகள் நிறைவடைந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
இதையும் படிக்க: அதிமுகவில் துணைப்பொதுச்செயலாளர் பதவி கேட்டார் – ஆதவ் அர்ஜுனா குறித்து இபிஎஸ் கருத்து
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் ஆதங்கம்:
தற்போது தங்களுக்குத் தற்காலிக அடிப்படையிலேயே பணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனை விரைந்து பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகியும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரோ அல்லது மக்கள் பிரதிநிதிகளோ தங்களை நேரில் சந்திக்கவில்லை என்றும், தொலைபேசி வாயிலாகக்கூட ஆறுதல் தெரிவிக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களது தீவிர ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.