சிவகங்கையில் நடுநடுங்க வைக்கும் கொடூரம்.. பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி இரு இளைஞர்கள் வெட்டிப் படுகொலை.. 5 பேர் அதிரடி கைது!
Sivagangai Double Murder Case: சிவகங்கை கொடிக்காடு கண்மாய் இரட்டை கொலை வழக்கில் 5 பேரை கைது செய்து காவல் துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பழமைக்காரன் பில்லூரை சேர்ந்த பாலமுருகன், தனராஜ், சந்தோஷ், சதீஷ்குமார், காளீஸ்வரன் ஆகியோர் பிடிபட்டுள்ள நிலையில், கொலையில் ஈடுபட்ட மேலும் 3 பேரை தனிப்படை தீவிரமாகத் தேடி வருகிறது.
சிவகங்கை, செப்டம்பர் 17: தென் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சிவகங்கை கொடிக்காடு கண்மாய் இரட்டை படுகொலை சம்பவத்தில், தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்கக் காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காரில் சென்று கொண்டிருந்த இரு இளைஞர்களை 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், முக்கியக் குற்றவாளிகள் 5 பேரை காவல்துறை தற்போது கைது செய்துள்ளது.
மேலும் படிக்க: காதல் வலையில் பெண் காவலர்.. கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட ஆண் காவலர்.. சென்னையில் பரபரப்பு!
கொல்லப்பட்டவர்களின் பின்னணி:
கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான சிவகங்கை அருகே உள்ள காயாவோடை கிராமத்தைச் சேர்ந்த தெய்வவேந்திரன், கோவை பொள்ளாச்சி பகுதியில் மதுபான பார் நடத்தி வருகிறார். மற்றொருவரான சிறுவேலங்குடி பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் பூப்பாண்டி, அப்பகுதியில் சிறிய அளவில் ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இருவரும் நேற்று மதியம் 3 மணி அளவில் புதிய காரில் கொடிக்காடு கண்மாய் பகுதிக்கு வந்து அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக மூன்று இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 6-க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட மர்மக் கும்பல், இவர்களது காரை சட்டென்று சூழ்ந்துள்ளது.
ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பல்:
ஆயுதங்களுடன் சூழ்ந்த கும்பலைக் கண்டதும் அச்சமடைந்த தெய்வவேந்திரனும் பூப்பாண்டியும் காரை விட்டு இறங்கி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த கொடிக்காடு கண்மாய்க்குள் தாவிப் பாய்ந்து தப்பியோடினர். ஆனால், அவர்களை விடாமல் பின்தொடர்ந்த அந்த வெறிபிடித்த கும்பல், கண்மாய் சேற்றுக்குள் இறங்கி ஓட ஓட விரட்டிச் சென்று இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த இருவருமே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். ஆத்திரம் அடங்காத அக்கிரமக் கும்பல், இறந்தவர்களின் முகத்தை அடையோளம் தெரியாதவாறு கொடூரமாக வெட்டிச் சிதைத்ததோடு, அவர்கள் வந்த புதிய காரின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
செல்போன் டவர் ஆய்வில் சிக்கிய 5 பேர்:
இந்த வழக்கில் தொடர்புடையவர்களைப் பிடிக்கத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் அப்பகுதியில் பதிவான செல்போன் டவர் சிக்னல்களை விரிவாக ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டனர். இதில், ஏற்கனவே கொலை வழக்கு உள்ள பில்லூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், அவருடன் இருந்த தனராஜ், சந்தோஷ், மாத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் ஆளுப்புலை தாங்கியைச் சேர்ந்த காளீஸ்வரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மீதமுள்ள 3 நபர்களைப் பிடிக்கத் தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: சொத்தை ஆசிரமத்துக்கு எழுதி வைப்பதாக மிரட்டல்.. தந்தையை கொன்று மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய மனைவி-மகன்.. சென்னையில் பயங்கரம்!
மருத்துவமனையில் திரண்ட உறவினர்கள்:
கொலை செய்யப்பட்ட தெய்வவேந்திரன் மற்றும் பூப்பாண்டியின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காகச் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு இருவரின் உறவினர்களும் பெருந்திரளாகக் கூடியதால் சோகமும் பதற்றமும் நிலவுகிறது. உறவினர்கள் சிலர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு சிவகங்கையின் முக்கியப் பகுதிகள் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.