சொத்தை ஆசிரமத்துக்கு எழுதி வைப்பதாக மிரட்டல்.. தந்தையை கொன்று மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய மனைவி-மகன்.. சென்னையில் பயங்கரம்!
Chennai Murder : சென்னையில் சொத்து தகராறில் தந்தையை கொலை செய்து மாரடைப்பால் உயிரிழந்ததாக நாடகம் ஆடிய மகன் மற்றும் தாயை வாலாஜாபாத் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டம், பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் சிவபாதம் ( 70 வயது). இவர், அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி ரேணுகா ( 50 வயது). தம்பதிக்கு மது சூதனன் ( 39 வயது) என்ற மகன் உள்ளார். இன்ஜினியரிங் படித்துள்ள இவர், தனியார் கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. சிவபாதத்துக்கு சொந்தமாக பெருங்குடி பழைய மாமல்லபுரம் சாலையில் பல்வேறு இடங்களில் வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுசூதனன் கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், அந்த வேலையை விட்டுவிட்டு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பெருங்குடியில் உள்ள தனது பெற்றோர் மற்றும் மனைவி, குழந்தையுடன் வசித்து வருகிறார்.
குடும்ப தகராறால் தனியாக வசித்த தந்தை
சிவபாதம் பெயரில் உள்ள வீடுகளில் இருந்து கிடைக்கும் வாடகை பணத்தை பெற்று மதுசூதனன் தனது குடும்பத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், சிவபாதம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதால் அதற்கான செலவு அதிகமாக ஆகியது. இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக சிவபாதம், வாலாஜாபாத் அருகே உள்ள மருதம் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று தனியாக வசித்து வந்தார்.
மேலும் படிக்க: Anbil Mahesh Poyyamozhi : அதிகாலையில் பரபரப்பு.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் குற்ற புலனாய்வு போலீசார் சோதனை!




கணவரிடம் தகராறு செய்த மனைவி- மகன்
இதனிடையே, மருதம் கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் வீட்டு கிரகப்பிரவேசத்துக்காக ரேணுகா மற்றும் அவரது மகன் மதுசூதனன் ஆகியோர் சென்றனர். அப்போது, சிவபாதத்திடம் எதற்காக இங்கு தங்கி உள்ளீர்கள். தேவையின்றி அதிக செலவு செய்கிறீர்கள். சென்னைக்கு வந்துவிட்டால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது என்று கூறி அவரை அழைத்துள்ளனர். இதற்கு, சிவபாதம் மறுப்பு தெரிவித்த நிலையில், சென்னையில் உள்ள வீட்டில் இருந்து வரும் வாடகை பணத்தை எங்களிடம் கொடுங்கள், எனது செலவுக்கு பயன்படுத்திக் கொள்கிறேன் என்று கூறி மதுசூதனன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
தந்தையை கொன்று நாடகமாடிய மகன்- தாய்
அப்போது, எனது செலவுக்கு பணம் தரவில்லை என்றால் எனது பெயரில் உள்ள சொத்துக்களை அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்து விடுவதாக சிவபாதம் மிரட்டி உள்ளார். இதில், ஆத்திரமடைந்த மதுசூதனன் கத்தியால் சிவபாதத்தை வெட்டி கொலை செய்துவிட்டு, மாரடைப்பால் இறந்து விட்டதாக நாடகமாடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் ரேணுகா மற்றும் மதுசூதனையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: காதல் வலையில் பெண் காவலர்.. கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட ஆண் காவலர்.. சென்னையில் பரபரப்பு!