மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. க்யூ ஆர் கோடுடன் வாகன நிறுத்துமிடம்!
Madurai Traffic diversion : மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் மதுரையில் பல்வேறு இடங்களில் இன்று இரவு முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், வாகனங்களை நிறுத்துவதற்கு க்யூ ஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளாதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை செப்டம்பர் 17- ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று புதன்கிழமை இரவு 10 மணி முதல் நாளை இரவு 10 மணி வரை பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கோவிலை சுற்றி உள்ள சித்திரை, ஆவணி, மாசி ஆகிய வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது. நகரப்பகுதிகளுக்குள் சரக்கு மற்றும் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மாட்டுத்தாவணியில் இருந்து ஆரப்பாளையம் வழியாக திண்டுக்கல் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பழ மார்க்கெட் சந்திப்பு, மேலமடை சந்திப்பு, ஆவின் வழியாக மதுரை வைகை வடகரை, தத்தனேரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.
மாட்டுத்தாவணி செல்லும் வாகனங்கள்
ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து மாட்டுத்தாவணிக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஆரப்பாளையம் பாலம், தத்தனேரி சாலை வழியாக வழக்கமான சாலைகளில் சென்று வரலாம். இதே போல, பாத்திமா கல்லூரி சந்திப்பு பகுதியில் இருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு செல்லும் பேருந்துகள் கூடல் நகர் பாலம் ஆனையூர் சாலை, அய்யர் பங்களா சந்திப்பு, மூன்று மாவடி சர்வேயர் காலனி சந்திப்பு, 120 அடி சாலை வழியாக செல்ல வேண்டும்.
மேலும் படிக்க: நடுநடுங்க வைக்கும் சம்பவம்.. 2 பைக்கில் வந்த சுத்து போட்ட 6 பேர் கும்பல்.. செங்கல்பட்டில் இளைஞரை தீர்த்துக்கட்டிய கும்பல்!




பெரியார் பேருந்து நிலையம் செல்லும் வாகன ஓட்டிகள்
இதே போல, திருப்பரங்குன்றத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையத்துக்கு வரும் வாகனங்கள் பழங்காநத்தம் ரவுண்டானா சந்திப்பில் இருந்து எல்லீஸ் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் டி. பி. சாலை, காளவாசல் சந்திப்பு வழியாக திருப்பரங்குன்றம் செல்ல வேண்டும். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் அருப்புக்கோட்டை ரிங் ரோடு வழியாக செல்லலாம். மாட்டுத்தாவணியில் இருந்து ஆரப்பாளையம் நோக்கி செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கே. கே. ஆர். ஆர்ச், தமுக்கம், ஆழ்வார்புரம், வைகை வடகரை சாலை, தத்தனேரி, ஆரப்பாளையம் பாலம் வழியாக செல்லலாம்.
வாகனங்கள் நிறுத்த க்யூ ஆர் கோடு அறிமுகம்
இதே போல, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு செல்லும் வாகனங்கள் ஆரப்பாளையம், தத்தனேரி சாலை வழியாக எப்போதும் செல்லும் சாலைகளில் செல்ல வேண்டும். காளவாசலில் இருந்து அரசரடி சந்திப்பு, ஜெயில் ரோடு வழியாக கோரிப்பாளையம், அழகர்கோவில் சாலை, மேலூர் செல்லும் வாகனங்கள் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, கர்டர் பாலம், எல்ஐசி பாலம் வழியாக செல்லலாம். பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு க்யூ ஆர் கோடு தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தங்களது வாகன நிறுத்தங்களை தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பூட்டிய வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்.. 1.5 கோடி நகை-பணம் சுருட்டல்.. சிவகங்கையை உலுக்கிய துணிகர கொள்ளை!