நண்பரை நம்பி ரஷ்யா சென்ற விருதுநகர் இளைஞர்.. கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்ப்பு.. பெற்றோர் பரிதவிப்பு!
Virudhunagar Youth Viral Video : விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ரஷ்யா சென்ற நிலையில், தன்னை கட்டாயப்படுத்தி அந்த நாட்டு ராணுவத்தில் சேர்த்துள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளார். அவரை மீட்க கோரி அவரது பெற்றோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுராஜ். கூலி வேலை பார்த்து வரும் இவருக்கு லலிதா என்ற மனைவியும், விக்னேஷ் ( 32 வயது), அபினேஷ் குமார் ( 28 வயது) என்ற மகன்களும் உள்ளனர். இவர்கள் இருவரும் கல்லூரியில் பட்டப்படிப்பை படித்து முடித்துள்ளனர். இதில், இளைஞர் அபினேஷ் குமார் சமூக வலைதளங்களில் அதிக அளவு உபயோகப்படுத்தி வந்துள்ளார். இதில், ஏராளமான நண்பர்களை சேர்த்து வைத்திருந்தார். அதன்படி, பகிரகன் என்ற பெயரில் ஒருவர் சமூக வலைதளம் மூலமாக நண்பராக அறிமுகமாகி உள்ளார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பல மாதங்களாக நண்பர்களாக பேசி வந்துள்ளனர். இதனிடையே, அண்மையில் அறிவியலை ஒரு பாடமாக படித்திருந்தால் ரஷ்யாவின் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் ரஷ்யா சென்ற விருதுநகர் இளைஞர்
இதற்காக நான் ஏஜெண்டாக செயல்படுவதாக பகிரகன் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அபினேஷ் குமாருக்கு மருத்துவம் படிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அபினேஷ் குமார் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும், இதனை நம்பி தனது மகனின் ஆசையே நிறைவேற்றுவதற்காக அபினேஷ் குமாரை ரஷ்யாவுக்கு மருத்துவம் படிப்பதற்காக விசா எடுத்து கடந்த ஏப்ரல் 13- ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் படிக்க: பூட்டிய வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்.. 1.5 கோடி நகை-பணம் சுருட்டல்.. சிவகங்கையை உலுக்கிய துணிகர கொள்ளை!




பெற்றோருடனான இளைஞரின் தொடர்பு துண்டிப்பு
அதன்படி, ரஷ்யாவுக்கு சென்ற இளைஞர் அபினேஷ் குமார் தொடர்ந்து மூன்று மாதங்கள் பெற்றோரிடம் செல்போன் வாயிலாக பேசி வந்தார். அதன் பின்னர் பெற்றோரை, அபினேஷ் குமார் தொடர்பு கொள்ளவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் அபினேஷ் குமாரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் முடியவில்லை. இந்த நிலையில், ரஷ்ய ராணுவத்தில் தான் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டதாக அபினேஷ் குமார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக இளைஞர் வீடியோ
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அபினேஷ் குமாரின் பெற்றோர்கள், தனது மகன் மருத்துவம் படிப்பதற்காக ரஷ்யா சென்ற நிலையில், அவரை கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்த்ததாகவும், அவரை மீட்டு தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்யா மற்றும் ஒக்கிரன் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில், உக்கிரன் மற்றும் ரஷ்யாவுக்கு படிக்க சென்ற வெளிநாட்டு மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதில், சில மாணவர்கள் ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் துறையில் முறைகேடு புகார்.. தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை.. அதிர்ச்சி பின்னணி!