பூட்டிய வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்.. 1.5 கோடி நகை-பணம் சுருட்டல்.. சிவகங்கையை உலுக்கிய துணிகர கொள்ளை!
Thirupuvanam Rs.1.5 Crore Jewelry- Cash Stolen : சிவகங்கை மாவட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 126 பவுன் தங்க நகை, ரூ. 1.60 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வீட்டில் சுமார் ரூ. 1 கோடியை 50 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள ஜெய பாரத் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரி. இவர், கொந்தகை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை ஆசிரியர் மகேஸ்வரி தனது கணவர் மற்றும் மகன்களுடன் வெளியூர் சென்றுள்ளார். இதனால், இவரது வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்தனர்.
126 பவுன் நகை- ரூ.1.60 லட்சம் கொள்ளை
அவர்கள், வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 126 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் மகேஸ்வரி குடும்பத்தினர் வெளியூரில் இருந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டின் வெளிக்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டில் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததுடன், நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மேலும் படிக்க: நடுநடுங்க வைக்கும் சம்பவம்.. 2 பைக்கில் வந்த சுத்து போட்ட 6 பேர் கும்பல்.. செங்கல்பட்டில் இளைஞரை தீர்த்துக்கட்டிய கும்பல்!




தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் மகேஸ்வரி திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தலைமை ஆசிரியர் வீட்டில் கண்காணிப்பு கேமரா இல்லாத நிலையில், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், கொள்ளை கும்பலின் உருவம் பதிவாகி இருப்பதாக தெரிகிறது.
சிவகங்கை எஸ்.பி. நேரில் விசாரணை
அதன் அடிப்படையில், போலீசார் கொள்ளை கும்பலுக்கு வலை வீசி உள்ளனர். அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பு வீடுகள் அதிகமாக உள்ள இடத்தில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, சிவகங்கை எஸ். பி. அபிஷேக் குப்தா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் படிக்க: திண்டுக்கல்லில் மகளை கேலி செய்ததால் ஆத்திரம்.. இளைஞரை கொன்று உடல் தண்ணீர் தொட்டியில் வீச்சு.. தந்தை உள்பட மூவர் கைது!