ஏர்வாடியில் ரத்த களறி.. இருவர் கொடூரமாக வெட்டி படுகொலை.. கொலையாளிகளுக்கு வலை வீசிய போலீசார்!
Ramanathapuram Double Murdered : ராமநாதபுரம் மாவட்டத்தில் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக ஏர்வாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள கீழக்கரை காட்டுப்பகுதி அமைந்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலையில் அந்த வழியாக பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்போது, அந்த பகுதியில் இருவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக ஏர்வாடி காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த பகுதிகளில் தடயங்கள் குறித்து சோதனை மேற்கொண்டனர். அத்துடன், மோப்ப நாய்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
கொலை செய்யப்பட்ட இருவர் யார்
பெரிதளவில் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் இரு ஆண் சடலங்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஏர்வாடி போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர்கள் கணேசன் என்கிற ரியாஸ் மற்றும் கோபி என்பது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க: இலங்கை டூ தமிழகத்துக்கு கடத்தல் முயற்சி.. திமிங்கல வாந்தியுடன் சிக்கிய இருவர்.. ரூ. 7 கோடி கடல் தங்கம் பறிமுதல்!




ஏர்வாடி போலீசார் தீவிர விசாரணை
இவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரமும், இவர்களை யார் இங்கு அழைத்து வந்து கொலை செய்தார்கள் என்ற விவரமும் உடனடியாக தெரியவில்லை. அத்துடன், இருவரது சடலங்களில் ரத்த காயங்கள் பலமாக இருப்பதால், அவர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. மேலும், அந்த காட்டுப் பகுதிக்கு செல்லும் வழிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
செல்போன் சிக்னல்கள் அடிப்படையில் தேடுதல் வேட்டை
அதில், குற்றவாளிகளின் உருவங்கள் எதுவும் பதிவாகியுள்ளதா எனவும், கொலையாளிகள் யார், என்ன காரணத்துக்காக கொலை செய்தனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் பதிவான செல்போன் சிக்னல்களை போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும், அதில் கிடைக்கும் துப்பின் அடிப்படையில் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஏர்வாடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ராமநாதபுரம் மாவட்ட காவல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: CM விஜய் கெட்டப்பில் விநாயகர்.. செம மாஸாக செல்ஃபி எடுக்கும் ரசிகர்கள்.. வைரலாகும் ‘விஜய் விநாயகர்’ கொண்டாட்டம்!