இலங்கை டூ தமிழகத்துக்கு கடத்தல் முயற்சி.. திமிங்கல வாந்தியுடன் சிக்கிய இருவர்.. ரூ. 7 கோடி கடல் தங்கம் பறிமுதல்!
Ambergris Seized In Sri Lanka : இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு கடத்த முயன்ற ரூ. 7 கோடி மதிப்பிலான 67 கிலோ அம்பர் கிரீஸை அந்த நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இதில், தொடர்புடைய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு ரூ. 7 கோடி மதிப்பிலான அம்பர் கிரீசை கடத்தி வர முயன்ற இருவரை இலங்கை நாட்டு கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை, மன்னார் பகுதியில் அந்த நாட்டின் மத்திய கடற்படை கட்டளையகத்தின் எஸ்.எல்.என்.எஸ் கஜபா கப்பலை சேர்ந்த வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் அங்கு நின்று கொண்டிருந்த சுமார் 26 வயது மற்றும் 36 வயது மதிக்கத்தக்க 2 பேரிடம் கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த கடற்படையினர், அவர்களிடம் இருந்த உடைமைகளை சோதனை செய்தனர். இதில், கடற் படையினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 67 கிலோ திமிங்கலத்தின் எச்சம் இருந்தது தெரியவந்தது.
67 கிலோ அம்பர் கிரீஸ் பறிமுதல்- இருவர் கைது
தொடர்ந்து, அம்பர் கிரீசை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். அத்துடன், அதனை வைத்திருந்த இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், கடல் பகுதியில் திமிங்கலம் வெளியிடும் எச்சத்தை சேகரித்து அதனை மொத்தமாக தமிழகத்துக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா, சர்வதேச தொடர்புகள் உள்ளதா என்பது குறித்தும் கடற்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: சென்னையில் பூனை விஷம் வைத்து கொலை? – போலீஸ் விசாரணை




ரூ. 7 கோடி மதிப்பிலான அம்பர் கிரீஸ் கடத்தல் முயற்சி
தற்போது, இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு கடல் வழியாக கடத்தி வர முயன்ற 67 கிலோ அம்பர் கிரீஸின் சர்வதேச மதிப்பு ரூ. 7 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பர் கிரீஸ் என்பது திமிங்கலம் வெளியிடும் எச்சம் ஆகும். இதனை, சேகரிப்பதும், கடத்துவதும், விற்பதும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உண்டான செயலாகும். சர்வதேச அளவில் இதற்கு இருந்து வரும் மதிப்பின் காரணமாக சிலர் திமிங்கலம் எச்சத்தை கடத்துவது அவ்வப்போது நடந்து வருகிறது.
அம்பர் கிரீஸ் என்றால் என்ன.. அதன் பயன்கள்
திமிங்கலம் எச்சத்தின் மூலம் உயர் ரக வாசனை திரவியங்கள், விலை உயர்ந்த மதுபானங்களில் நறுமணத்தை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அத்துடன், சில வகையான மருந்துகளை தயார் செய்யவும் திமிங்கலம் எச்சம் உபயோகப்படுத்தப்படுகிறது. மிகவும் அரிதாக கிடைக்கக்கூடிய இந்த திமிங்கலம் எச்சம் கடல் தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இதனால், இதற்கான மதிப்பும் சர்வதேச அளவில் அதிகமாக இருந்து வருகிறது.
மேலும் படிக்க: தவெக கட்சி கொடி வண்ணத்தில் புதிய பேருந்துகள்… சர்ச்சையாகும் புகைப்படங்கள்