தவெக கட்சி கொடி வண்ணத்தில் புதிய பேருந்துகள்… சர்ச்சையாகும் புகைப்படங்கள்
TVK Flag Colours Spark Controversy : தவெக அரசு அமைந்த பிறகு மாவட்டம் தோறும் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 30 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளன. ஜான்சன்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் புதிய பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
சேலம், செப்டம்பர் 13 : தவெக அரசு அமைந்த பிறகு மாவட்டம் தோறும் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 30 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளன. ஜான்சன்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் புதிய பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
தவெக கட்சி கொடி வண்ணத்தில் புதிய பேருந்துகள்
இந்த நிலையில் பேருந்துகள் அனைத்தும் தவெக கட்சி கொடியான மஞ்சள் சிகப்பு வண்ணத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு , ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப திட்டங்களின் பெயர் பேருந்து வண்ணங்கள் மாற்றப்படுவது வழக்கமாக உள்ளது. அது போல தற்போது அமைந்துள்ள புதிய ஆட்சியும் தங்களுக்கு விருப்பமான வண்ணங்களை பேருந்திற்கு வழங்கி உள்ளது. அதில் கட்சியின் வண்ணம் அப்பட்டமாக இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தற்போது சர்ச்சையாக மாறி வருகிறது.
முன்னதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மொபைல் செயலி, தவெக கட்சி கொடி நிறமான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வெள்ளை நிறத்தில் இருந்த டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி, தற்போது தவெக கொடியின் நிறங்களான சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. செயலியின் முகப்பில் இடது புறத்தில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படமும், வலது புறத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இலட்சினையும் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிதாக வாங்கப்படும் மற்றும் சீரமைக்கப்படும் அரசுப் பேருந்துகளின் நிறம் தவெக கொடியின் நிறத்திற்கு மாற்றுவதற்கான பணிகள் நடந்து வந்தன. அந்த வகையில் புதிய பேருந்துகள் எல்லாம் மஞ்சள், சிவப்பு கலந்து தவெக கொடியின் நிறத்தில் உள்ளன.
இது தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் நிர்மல் குமார் , விளம்பரப் படுத்த வேண்டிய அவசியம் தவெகவுக்கு இல்லை. தவெக மக்களிடம் விரைவாக சென்றடைந்தது அனைவருக்கும் தெரியும். துறை அதிகாரிகளே இத்தகைய வண்ணங்களை வடிவமைத்திருப்பார்கள்” என்றார்.
இனி தமிழக வெற்றி கழக ஆட்சியில் அனைத்துமே மஞ்சள் மற்றும் சிவப்புக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசு திட்டங்கள் மஞ்சள் சிவப்பு நிறத்துக்கு மாறுவது ஒரு தலைபட்சமான செயல் என பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அனைத்து பேருந்துகளும் ஒரே நிறத்தில் இருந்தால் பேருந்துகளை கண்டறிவதில் மக்களுக்கு சிரமம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.