14 வயது சிறுமிக்கு வன்கொடுமை – போலீஸை அரிவாளால் வெட்டிய குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு
கோவை மாநகரில் 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நபர், மறைத்து வைத்து இருந்த அரிவாளை மீட்க அழைத்துச் சென்ற போது பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கித் தப்பியோட முயன்றதால், காவல்துறையினர் அவரைத் தற்காப்பிற்காகத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, செப்டம்பர் 13 : கோவை மாநகரில் 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான நபர், மறைத்து வைத்து இருந்த அரிவாளை மீட்க அழைத்துச் சென்ற போது பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கித் தப்பியோட முயன்றதால், காவல்துறையினர் அவரைத் தற்காப்பிற்காகத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீஸை அரிவாளால் வெட்டிய குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு
கோவை மாநகரம், தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (12.09.2026) இரவு சுமார் 7.30 மணி அளவில் 14 வயது சிறுமி ஒருவர் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகாரளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த தெற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சந்தோஷ் (24) மற்றும் தவசி (28) ஆகிய இருவர் சேர்ந்து அச்சிறுமியைக் கடத்திச் சென்று, கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதை அடுத்து, தலைமறைவாக இருந்த சந்தோஷ் மற்றும் தவசி ஆகிய இருவரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, சிறுமியை மிரட்டுவதற்குப் பயன்படுத்திய அரிவாளை மறைத்து வைத்து இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதாக தவசி தெரிவித்து உள்ளார். அதன் பேரில், தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான காவல் குழுவினர், தவசியை குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, அங்கு மறைத்து வைத்து இருந்த அரிவாளைத் திடீரெனக் கையில் எடுத்த தவசி, காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியைப் பயங்கரமாக வெட்டினார். இதில் ஆய்வாளரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆய்வாளரை வெட்டிவிட்டுத் தப்பியோட முயன்ற தவசியைப் பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சிலம்பரசன் மற்றும் காவலர்கள் உடனடியாக எச்சரித்தனர்.
எனினும், எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் மீண்டும் அரிவாளுடன் காவல் அதிகாரிகளைத் தாக்க முயன்றதால், காவல் அதிகாரிகளின் உயிரைப் பாதுகாக்கும் பொருட்டுத் தற்காப்பு நடவடிக்கையாக தவசியின் இடது காலில் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குற்றவாளி தவசிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அரிவாள் வெட்டில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட சந்தோஷ் மற்றும் தவசி மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தயவுதாட்சண்யமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்யக் கோவை மாநகரக் காவல்துறை முன்னுரிமை அளித்து வருவதாகவும் காவல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.