மதுராந்தகம் – தாராபுரம் இடைத்தேர்தல்.. போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்த தவெக, திமுக வேட்பாளர்கள்!
TVK- DMK Candidates File Nomination : தமிழகத்தில் மதுராந்தம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நாளையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது.
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 6- ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேல், கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் உள்ளிட்டோருடனும், தாராபுரம் தொகுதியில் போட்டியிட உள்ள தவெக வேட்பாளர் சத்தியபாமா, திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட உள்ள வழக்கறிஞர் பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் போட்டியிட உள்ள வழக்கறிஞர் சுகன்யா ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை இன்று செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 15) தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தாக்கல் செய்தனர். இதேபோல, அதிமுக, நாம் தமிழர் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் விரைவில் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.
நாளையுடம் முடிவடையும் வேட்பு மனு தாக்கல்
கடந்த செப்டம்பர் 9- ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், நாளை புதன்கிழமை ( செப்டம்பர் 16- ஆம் தேதியுடன்) வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிவடைகிறது. தொடர்ந்து, செப்டம்பர் 17- ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. செப்டம்பர் 19- ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஆகும். இதைத் தொடர்ந்து, தங்களது கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர்.
மேலும் படிக்க: மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு – திமுகவின் முப்பெரும் விழா ஒத்திவைப்பு




2 தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடும் முதல்வர் விஜய்
அதன்படி, முதல்வர் ஜோசப் விஜய் லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்து சென்னை திரும்பியதும், 2 கட்டங்களாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, வருகிற 25- ஆம் தேதி மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரச்சாரத்தை தொடங்குகிறார். தாராபுரம் தொகுதியில் 27- ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து, 2- ஆவது கட்டமாக அக்டோபர் 2 மற்றும் 3- ஆம் தேதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் முதல்வர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
5 முனைப்போட்டியை எதிர் கொள்ளும் மதுராந்தகம்- தாராபுரம்
இந்த இரு தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழக வெற்றி கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அனைத்திந்திய திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த தேர்தல் களம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: முதல்வர் குறித்து அவதூறு பேச்சு – சேகர்பாபு மற்றும் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு