சபாநாயகருடன் திமுக எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு.. அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் புகார்..
DMK MLA's Complaint: சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது அமைச்சர் நிர்மல் குமார் உண்மைக்கு மாறாக பேசியதாகக் கூறி, அவர் மீது உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கடிதத்தை அளித்த திமுக எம்எல்ஏக்கள் குழு, தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர்.
செப்டம்பர் 15, 2026: அமைச்சர் நிர்மல் குமார் மீது திமுக எம்எல்ஏக்கள் உரிமை மீறல் புகார் அளித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகரை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ராஜா, ஏ.வ. வேலு ஆகியோர் சந்தித்தனர். சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியது தொடர்பாக, அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி ஏற்கனவே அளித்திருந்த மனுவின் நிலை குறித்து அறிய அவர்கள் சபாநாயகரை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் நிர்மல் குமார் மீது உரிமை மீறல் புகார்:
இந்த சந்திப்பின்போது, சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது அமைச்சர் நிர்மல் குமார் உண்மைக்கு மாறாக பேசியதாகக் கூறி, அவர் மீது உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கடிதத்தை அளித்த திமுக எம்எல்ஏக்கள் குழு, தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், “சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசினார். சட்டப்பேரவையில் இல்லாதவர்கள் குறித்து பேசுவது விதிப்படி தவறு. மிசா தொடர்பான முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி முன்னதாக மனு கொடுத்திருந்தோம்.
மேலும் படிக்க: அடுத்த 7 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா? வானிலை ரிப்போர்ட் இதோ..
திசை திருப்பும் அரசியலில் தவெக அரசு ஈடுபட்டுள்ளது:
உரிமை மீறல் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அது ஆய்வு செய்து நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கும். தவறான செய்தியை சட்டப்பேரவையில் பகிர்ந்து கொண்டது விதிமீறல் இல்லையா? பொய்யான தகவல்களைப் பேசி திசை திருப்பும் அரசியலில் தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை ஈடுபடுகிறது” எனக் குறிப்பிட்டனர்.
முன்னதாக, ஆகஸ்ட் 5ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. செப்டம்பர் 8ஆம் தேதி வரை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்றது. ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழ்நாட்டிற்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றதுடன், ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கைகள் நடத்தப்பட்டு விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் படிக்க: மதுராந்தகம் – தாராபுரம் இடைத்தேர்தல்.. போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்த தவெக, திமுக வேட்பாளர்கள்!
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் பதிலுரை:
அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், திமுக எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 7ஆம் தேதி முதலமைச்சர் தனது பதிலுரையின்போது பேசினார்.
அப்போது, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்றும், நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் முதலமைச்சர் பேசியிருந்தார். இது திமுகவினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் விஜய் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என சட்டப்பேரவையில் திமுக கொறடா ஏ.வ. வேலு வலியுறுத்தியிருந்தார். இதனிடையே, அந்த மனுவின் நிலை குறித்து அறியவும், அமைச்சர் நிர்மல் குமார் மீது உரிமை மீறல் புகார் அளிக்கவும் திமுக எம்எல்ஏக்கள் இன்று சபாநாயகரை சந்தித்துள்ளனர்.