நடுநடுங்க வைக்கும் சம்பவம்.. 2 பைக்கில் வந்த சுத்து போட்ட 6 பேர் கும்பல்.. செங்கல்பட்டில் இளைஞரை தீர்த்துக்கட்டிய கும்பல்!
Chengalpattu Youth Murdered : செங்கல்பட்டு மாவட்டத்தில் கொலை சம்பவத்தில் பழி தீர்ப்பதற்காக இளைஞரை இரு சக்க ர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்தது .
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வீர முத்துகிருஷ்ணன் ( 26 வயது). இவர், இந்த பகுதியில் பாஸ்ட் புட் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்று நிலுவையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, ஜாமினில் இருந்து வெளியே வந்த வீர முத்துகிருஷ்ணன் நீதிமன்றத்தில் தினந்தோறும் ஆஜராகி கையெழுத்து போட்டு வருகிறார். அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து இட்டுவிட்டு வீரமுத்து கிருஷ்ணன் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, திருச்சி- சென்னை பிரதான சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக நிறுத்தினார். அப்போது, அந்த வழியாக 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த இளைஞரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது.
இளைஞரை சரமாரியாக வெட்டி வீசிய கும்பல்
தொடர்ந்து, மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வீர முத்துகிருஷ்ணனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பி சென்று விட்டது. இந்த கொடூர சம்பவத்தில் வீர முத்துகிருஷ்ணன் பலத்த வெட்டு காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி சரிந்தார். இந்த கொடூர சம்பவத்தை பார்த்த அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இளைஞர் வீரமுத்து கிருஷ்ணனை ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: ஏர்வாடியில் ரத்த களறி.. இருவர் கொடூரமாக வெட்டி படுகொலை.. கொலையாளிகளுக்கு வலை வீசிய போலீசார்!




கொலைக்கு பழி தீர்த்த கும்பல்
ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஆகாஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வீர முத்துகிருஷ்ணன் முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார்.
போலீசார் தீவிர விசாரணை
இந்த சம்பவத்தில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக வீர முத்துகிருஷ்ணன் தீர்த்து கட்டுவதற்கு, ஆகாஷ் தரப்பினர் திட்டம் தீட்டி உள்ளனர். அதன்படி, நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து இட்டு விட்டு திரும்பிய போது, அந்த இளைஞரை மர்ம கும்பல் பழி தீர்த்தது தெரியவந்துள்ளது. மேலும், இதில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பன உள்ளிட்ட கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: கோவையில் அடுத்தடுத்து பரபரப்பு.. பைக்குகள் தீப்பற்றி எரிந்து சாம்பல்.. வாகன ஓட்டிகள் கடும் அச்சம்..!