அன்புமணி, டிடிவி தினகரன் ஆதரவு கிடைக்குமா? எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை..
Edappadi Palaniswami Meeting: இடைத்தேர்தல் தொடர்பாக பல்வேறு கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் யாருக்கு ஆதரவு என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் பாமகவின் ஆதரவு அதிமுகவுக்கு கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
செப்டம்பர் 15, 2026: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் இன்னும் ஓரிரு வாரங்களில் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மூத்த தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏழு தொகுதிகள் காலியாக இருக்கக்கூடிய சூழலில், இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஐந்து தொகுதிகளுக்கான தேர்தல் தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அந்த ஐந்து தொகுதிகளில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதன் காரணமாக, தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை.
5 முனைப்போட்டி:
இந்த சூழலில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவி வருகிறது. அதிமுக தரப்பில் மதுராந்தகத்தில் கனிதா சம்பத்தும், தாராபுரத்தில் பானுமதியும் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். பிற கட்சிகள் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இரண்டு தொகுதிகளிலும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுக செயல்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: நடுநடுங்க வைக்கும் சம்பவம்.. 2 பைக்கில் வந்த சுத்து போட்ட 6 பேர் கும்பல்.. செங்கல்பட்டில் இளைஞரை தீர்த்துக்கட்டிய கும்பல்!
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்:
இதற்காக, கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், தேர்தல் வியூகம் வகுப்பதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
பாமக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆதரவைக் கோரவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கே.பி. முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ். மணியன் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் படிக்க: 2 தொகுதி இடைத்தேர்தல்… தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்.. வேட்பாளர்கள் அறிவிப்பு!
பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு கிடைக்குமா?
இடைத்தேர்தல் தொடர்பாக பல்வேறு கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் யாருக்கு ஆதரவு என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் பாமகவின் ஆதரவு அதிமுகவுக்கு கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அதேநேரத்தில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற்றுள்ளதால், நிபந்தனையற்ற ஆதரவு கிடைக்கும் எனவும் அதிமுக தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இதன் காரணமாக பாமக மற்றும் அமமுகவின் ஆதரவை கோர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளும் அதிமுகவின் கோட்டையாக விளங்கிய நிலையில், இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது மீண்டும் வெற்றி பெற வேண்டும் என அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.