கோவையில் அடுத்தடுத்து பரபரப்பு.. பைக்குகள் தீப்பற்றி எரிந்து சாம்பல்.. வாகன ஓட்டிகள் கடும் அச்சம்..!
Coimbatore Motorcycles Fire : கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் வெவ்வேறு இடங்களில் 2 பைக்குகள் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீ பிடித்து எரிந்து சாம்பலானது. இந்தச் சம்பவம் வாகன ஓட்டுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் ஓட்டி சென்ற பைக் திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், செல்வபுரம், பிரியா நகர் பகுதியில் பெண் ஒருவர் தனது மொபெட்டில் ரேஷன் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவரது பைக்கின் எஞ்சின் பகுதியில் திடீரென கரும்பு புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அச்சமடைந்து பைக்கை சாலையிலேயே போட்டுவிட்டு தலை தெறிக்க ஓடினார். அடுத்த சில வினாடிகளில் மொபெட் சாலையிலேயே கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர்.
தீப்பிடித்து எரிந்த புதிய இரு சக்கர வாகனம்
இந்த சம்பவத்தில், அந்த பெண்ணுக்கு எந்த விதமான காயமும் ஏற்படவில்லை. இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூர், சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர் புதிதாக இரு சக்கரம் ஒன்று வாங்கியிருந்தார். அந்த வாகனத்தில் அந்த நபர் சரவணம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென, பைக்கின் எஞ்சின் பகுதிகள் கரும்புகை வெளியேறியதுடன், தீ விபத்து ஏற்பட்டு மளமளவென பைக் முழுவதும் தீ பரவி விபத்து ஏற்பட்டது.
மேலும் படிக்க: ஏர்வாடியில் ரத்த களறி.. இருவர் கொடூரமாக வெட்டி படுகொலை.. கொலையாளிகளுக்கு வலை வீசிய போலீசார்!
48 மணி நேரத்தில் இரு பைக்குகள் தீ பிடித்து எரிந்து சேதம்
இந்த விபத்திலும், பைக்கை ஓட்டி வந்த ஓட்டுநர் எந்தவித காயமும் இன்றி தப்பினார். கோவையில் கடந்த 48 மணி நேரத்துக்குள் 2 பைக்குகள் அடுத்தடுத்து தீ பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூரில் அண்மைக்காலமாக பெட்ரோலில் எத்தனால் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலின் காரணமாகவே பைக்குகளின் எஞ்சின் அதிக வெப்பம் அடைந்து தீ விபத்து ஏற்படுகிறதா.
பெட்ரோல் தர கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு செய்க
அல்லது பைக்கின் ரப்பர் பைப் சேதம் அடைந்து அதன் மூலம் தீ விபத்து ஏற்படுகிறதா என்ற சந்தேகம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் எழுந்து உள்ளது. புதிய மற்றும் நல்ல நிலையில் உள்ள பைக்குகள் தீப்பிடித்து எரிவதால் ஓட்டுநர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பெட்ரோல் தர கட்டுப்பாடு மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் தொழில் நுட்ப கோளாறுகள் குறித்து போக்குவரத்து துறை மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் உரிய ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: மதுராந்தகம் – தாராபுரம் இடைத்தேர்தல்.. போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்த தவெக, திமுக வேட்பாளர்கள்!


