2 தொகுதி இடைத்தேர்தல்… தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்.. வேட்பாளர்கள் அறிவிப்பு!
Left Wing Parties Candidates Announced : தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் அடுத்த மாதம் அக்டோபர் 6- ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தன. அதன்படி, இந்த கட்சிகள் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 15) வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராக இருக்கும் இவர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் மாநில பொதுச் செயலாளராக 10 ஆண்டுகளாக இருந்துள்ளார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக, மக்களுக்கு எதிரான வன்கொடுமை போராட்டத்திலும் பங்கெடுத்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களம் ஆடுபவர்.
மேலும் படிக்க: சபாநாயகருடன் திமுக எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு.. அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் புகார்..




தாராபுரம் தொகுதி வேட்பாளர் லட்சுமணன்
கட்டிட தொழிலாளியான இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிநேர ஊழியராக இருந்து வருகிறார். தாராபுரம் தாலுகா செயலாளராக பொறுப்பேற்று வேலை பார்த்து வருகிறார். கட்டிட தொழிலில் ஈடுபட்டுக் கொண்டே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார். தற்போது கட்சியின் முழு நேர ஊழியராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். கூலித் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கான போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். இந்த இரண்டு வேட்பாளர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனின்ஸ்ட் ஆதரிக்கிறது.
தமிழ் மண்ணை இடதுசாரிகள் பக்கம் திருப்ப வேண்டும்
இது மட்டும் இன்றி இடதுசாரிகள் மட்டுமின்றி பெரியார், அம்பேத்கர், காந்திய சிந்தனை உள்ளவர்கள், சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்று எண்ணக் கூடியவர்கள் உள்ளிட்டோர் ஆதரிக்க வேண்டும். தமிழக மக்களை அரசியல் மயமாக்க விரும்புகிறோம். சாதி மற்றும் மதங்களுக்கு அப்பால், இன பேதங்களுக்கு அப்பால் தமிழக மக்கள் தொலைநோக்கு பார்வையுடன் தமிழ் மண்ணை இடது பக்கம் திருப்புவதற்கான பெரும் பொறுப்பு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.
இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவு வேண்டும்
தமிழகத்தில் உள்ள சூழ்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சட்டமன்றத்துக்கு சென்றால் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், ஏழை, எளிய மக்களின் குரலாகவும் ஒலிப்போம். சட்டமன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றுவதற்கு எங்கள் வேட்பாளர்கள் பாடுபடுவார்கள். எனவே, இடதுசாரி கட்சிகளின வேட்பாளர்களை ஆதரித்து சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.
மேலும் படிக்க: மதுராந்தகம் – தாராபுரம் இடைத்தேர்தல்.. போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்த தவெக, திமுக வேட்பாளர்கள்!