முதல்வர் விஜய் லண்டன் பயணம்: தமிழ்நாட்டில் ரூ.15,300 கோடிக்கும் மேல் முதலீடு; 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு
CM Vijay London Visit: 45-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம், தமிழ்நாட்டில் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் தளவாட வசதிகளை விரிவுபடுத்த ரூ.11,000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 7,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 15, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ரூ.15,300 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் மேற்கொள்ளும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் விருப்பக் கடிதங்கள் பெறப்பட்டுள்ளன. இதன்மூலம் 10,000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14ஆம் தேதி லண்டனில் முதலமைச்சர் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான ‘வழிகாட்டி தமிழ்நாடு’ மற்றும் முன்னணி உலகளாவிய நிறுவனங்களுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மதர்சன் நிறுவனம் ரூ.11,000 கோடி முதலீடு:
45-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம், தமிழ்நாட்டில் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் தளவாட வசதிகளை விரிவுபடுத்த ரூ.11,000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 7,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனைச் சேர்ந்த வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் மின்மாற்றி உற்பத்தி பணிகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம் 400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
மேலும் படிக்க: அன்புமணி, டிடிவி தினகரன் ஆதரவு கிடைக்குமா? எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை..
ஸ்வீடனின் சிக்மா டெக்னாலஜி குழுமம், சென்னை மற்றும் திருச்சியில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்தி 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது. அதேபோல், எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம், சர்வதேச நிறுவனத்திற்காக தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி முதலீட்டில் உலகளாவிய திறன் மையத்தை அமைக்க உள்ளது. இதன்மூலம் 2,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஐரோப்பாவைச் சேர்ந்த முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனம், இந்தியாவில் ரூ.3,000 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் அமைக்க விருப்பக் கடிதம் வழங்கியுள்ளது.
ஹிந்துஜா குழுமத்துடன் முதல்வர் விஜய் சந்திப்பு:
லண்டனில் ஹிந்துஜா குழும நிர்வாகிகளையும் முதலமைச்சர் சந்தித்தார். தமிழ்நாட்டில் குழுமத்தின் முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, குறிப்பாக காற்றாலை மின்சக்தி துறையில் மேலும் முதலீடு செய்வது மற்றும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வணிக வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் துறையில் பெரும் முறைகேடு.. அமைச்சருக்கு தொடர்பு.. ஆதாரத்துடன் ஆப்படித்த அறப்போர் இயக்கம்!
பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்து, வர்த்தகத் தொடர்புகளை விரிவுபடுத்த வேண்டும் என முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், CETA ஒப்பந்தத்தின் மூலம் உருவாகும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.