சென்னைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட 25,000 போதை மாத்திரைகள்.. 4 பேர் கைது..
Narcotic Pill Seizure: மும்பையில் இருந்து ரயில் மூலம் போதை மாத்திரைகள் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக ANTF போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மும்பையில் இருந்து ரயில் மூலம் பெரம்பூர் ரயில் நிலையம் வந்த கும்பல், அங்கிருந்து காரில் போதை மாத்திரைகளை மயிலாப்பூர் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
செப்டம்பர் 15, 2026: சென்னையில் மிகப்பெரிய அளவில் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 25 ஆயிரம் போதை மாத்திரைகளை போதைப்பொருள் தடுப்பு அதிரடிப்படை (ANTF) போலீசார் பொறி வைத்து பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் திருநங்கை உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட 25,000 போதை மாத்திரைகள்:
மும்பையில் இருந்து ரயில் மூலம் போதை மாத்திரைகள் சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக ANTF போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மும்பையில் இருந்து ரயில் மூலம் பெரம்பூர் ரயில் நிலையம் வந்த கும்பல், அங்கிருந்து காரில் போதை மாத்திரைகளை மயிலாப்பூர் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது அவர்களை பின்தொடர்ந்து சென்ற ANTF போலீசார், மயிலாப்பூர் பகுதியில் பொறி வைத்து பிடித்தனர். தொடர்ந்து காரில் இருந்த போதை மாத்திரைகளை சோதனை செய்தபோது, சுமார் 25 ஆயிரம் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் படிக்க: அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்த காத்திருந்த அமைச்சர் மரிய வில்சன்.. பூங்கா பூட்டப்பட்டிருந்ததால் அதிருப்தி..
4 பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை:
கைது செய்யப்பட்டவர்கள் ராஜேஷ்குமார் (28), அருண்குமார் (29), ராம் குமார் (26) மற்றும் திருநங்கை குணஸ்ரீ (25) என தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் மட்டுமின்றி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை சென்னைக்கு அனுப்பியது யார், இவர்களுக்கு பின்னால் செயல்படும் நபர்கள் யார், சென்னையில் யாரிடம் போதை மாத்திரைகளை விநியோகம் செய்ய இருந்தனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: பூட்டிய வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்.. 1.5 கோடி நகை-பணம் சுருட்டல்.. சிவகங்கையை உலுக்கிய துணிகர கொள்ளை!
சென்னையில் இதுவரை சுமார் 1,000 முதல் 2,000 வரையிலான போதை மாத்திரைகள் மட்டுமே ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது முதன்முறையாக 25 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.