தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்குமா? அடுத்தடுத்து தாக்கலாகும் தேர்தல் தடை மனுக்கள்.. பின்னணி என்ன!
New Petition Filed Stay By Election : தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் களத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் மதுராந்தகம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, தமிழக அரசியல் களத்தை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காசி ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக சார்பில் மரகதம் குமரவேல் ( மதுராந்தகம் தனி தொகுதி), சத்யபாமா ( தாராபுரம் தனி தொகுதி), ஜெயக்குமார் ( பெருந்துறை), இசக்கி சுப்பையா ( அம்பாசமுத்திரம்), சி. விஜயபாஸ்கர் ( விராலிமலை), எம். ஆர். விஜயபாஸ்கர் ( கரூர்) ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
அரசியல் லாபத்துக்காகவே எம்எல்ஏ பதவிகள் ராஜினாமா
அத்துடன், அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உடல் நல குறைவு மற்றும் இயலாமை உள்ளிட்ட காரணங்களுக்காக தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்யவில்லை. இதற்கு மாறாக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அளித்த உறுதிமொழி, அமைச்சர் பதவிகள் உள்ளிட்ட சலுகைகளை பெறுவதற்காகவே ராஜினாமா செய்துள்ளனர். இந்த முடிவானது அந்தந்த தொகுதி வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதோடு மட்டுமின்றி அரசமைப்பு சட்டத்தை மீறிய செயலாகும். அவர்கள் தேவையின்றி ராஜினாமா செய்ததன் காரணமாகவே இடைத்தேர்தல் வரும் சூழ்நிலை உள்ளது.
மேலும் படிக்க: மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. க்யூ ஆர் கோடுடன் வாகன நிறுத்துமிடம்!




இடைத்தேர்தல் செலவு தொகையை வசூலிக்க வேண்டும்
தேர்தலுக்காக அரசு சார்பில் பொதுமக்களின் வரிப்பணத்தில் பெரும் தொகையை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தவர்கள், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் பட்சத்தில் இடைத்தேர்தலுக்கான செலவு தொகையை அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். இந்த தொகையை வழங்க மறுப்பவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 30- ஆம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி இருந்தேன். அந்த மனுவை பரிசீலனை செய்வதற்கு தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
6 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்
அதுவரை மேற்கண்ட 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். அத்துடன் இதுபோன்று மக்கள் விரோத ராஜினாமாக்களை தடுக்க, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இதில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அக்டோபர் 6- ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்.. எடப்பாடி வெளியிட்ட அறிவிப்பு.. யார்.. யார்.. இடம்பெற்றுள்ளனர்!