AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னை OMR அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரம்.. “11-வது மாடியில் வெடித்த ஃபிரிட்ஜ்!”.. தம்பதி உட்பட 3 பேர் படுகாயம்!!

Kelambakkam Fire Accident: செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே 14 அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது தளத்தில் ஃபிரிட்ஜ் கம்பிரஸர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் சிக்கிய தம்பதி படுகாயமடைந்த நிலையில், 54 மீட்டர் உயர 'ஸ்கை லேடர்' தீயணைப்பு வாகனம் மூலம் 1 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.

சென்னை OMR அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரம்.. “11-வது மாடியில் வெடித்த ஃபிரிட்ஜ்!”.. தம்பதி உட்பட 3 பேர் படுகாயம்!!
தீ விபத்து
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Sep 2026 10:42 AM IST

செங்கல்பட்டு, செப்டம்பர் 17: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் பல்லடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய உயரமான கட்டடங்களில் எதிர்பாராத விதமாக ஏற்படும் தீ விபத்துகள் குடியிருப்புவாசிகளிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்புக் கேள்விகளையும் எழுப்பி வருகின்றன. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் இரவு நேரத்தில் ஃபிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட திடீர் தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 11-வது தளத்தில் பற்றி எரிந்த தீயைக் கட்டுப்படுத்தத் தீயணைப்புத் துறையினர் மேற்கொண்ட தீவிர மீட்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

11-வது தளத்தில் திடீர் தீ விபத்து:

கேளம்பாக்கத்தை அடுத்துள்ள தையூர் பகுதியில் OMR சாலையையொட்டி அமைந்துள்ள பிபிஎல் சிட்டி என்ற 14 அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இங்குள்ள ஒரு கட்டிடத்தின் 11-வது தளத்தில் உள்ள வீட்டில் இரவு சுமார் 8 மணியளவில் திடீரெனப் புகை மூட்டம் கிளம்பித் தீ பற்றி எரியத் தொடங்கியது. தீயின் வேகம் நொடிக்கு நொடி அதிகரித்து, வீட்டின் ஜன்னல்கள் வழியே தீப்பிழம்புகள் வெளியில் வரத் தொடங்கியதால், அந்த தளத்தில் இருந்த குடியிருப்புவாசிகள் அலறியடித்துக் கொண்டு கீழே ஓடி வந்தனர்.

ஃபிரிட்ஜ் வெடித்ததால் பெருஞ்சேதம்:

தகவலறிந்து கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் தமிழன்பன் தலைமையிலான போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியின் கேஸ் கசிவு ஏற்பட்டு, அதன் கம்பிரஸர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதே இந்த விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்தது. இந்த வெடிவிபத்தால் வீட்டிலிருந்த ஏசி, மின்விளக்குகள் உள்ளிட்ட பிற மின்சாதனப் பொருட்களும் வரிசையாக வெடித்துத் தீ எங்கும் பரவியது. இதில் வீட்டின் 3 அறைகள் முற்றிலும் கருகிச் சாம்பலாயின. மேலும், வீட்டின் உரிமையாளரான பூமிநாதன் (எ) பிரேம்ஜி, அவரது மனைவி வினிதா மற்றும் 11 வயது குழந்தை உள்ளிட்ட மூவர் தீயில் சிக்கிக் கொண்டனர். துரிதமாகச் செயல்பட்ட பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மூவரையும் பத்திரமாக மீட்டு, கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

ஸ்கை லேடர் மூலம் 1 மணி நேரப் போராட்டம்:

கட்டிடத்தின் 11-வது தளம் என்பதால் சாதாரணத் தீயணைப்பு வாகனங்களால் தீயை அணைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. உடனடியாகச் சிறுசேரி தீயணைப்பு நிலையத்திலிருந்து 54 மீட்டர் உயரம் வரை உயர்ந்து செல்லக்கூடிய நவீன ‘ஸ்கை லேடர்’ தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வான்வழியாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, சுமார் 1 மணி நேரக் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சுமார் ரூ. 15 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் கருகி நாசமாகின. இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us