AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கோலகலமாக நடந்த மதுரை மீனாட்சி அம்மன் மகா கும்பாபிஷேகம்.. பக்தி பரவசத்தில் மக்கள்..

Madurai Meenakshi Amman Temple: மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாநகரமே விழாவைக் கொண்டாடி வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து வருகை தந்து சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். 

கோலகலமாக நடந்த மதுரை மீனாட்சி அம்மன் மகா கும்பாபிஷேகம்.. பக்தி பரவசத்தில் மக்கள்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Sep 2026 07:47 AM IST

செப்டம்பர் 17, 2026: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று (செப்டம்பர் 17) காலை முதல் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த பல மாதங்களாக கோயிலில் சுமார் ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபமும் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

மீனாட்சி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்:

அதேபோல், யாகசாலை பூஜைகளுக்காக வடக்கு ஆடி வீதியில் 184 குண்டங்களுடன் பிரம்மாண்டமான முறையில் யாகசாலை அமைக்கப்பட்டு, கால பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த கால பூஜைகள் செப்டம்பர் 11ஆம் தேதி தொடங்கின. இதில் 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.

மூலவர் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரருக்காக பிரத்யேக தங்கக் குடங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்தன. யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின.

விழாக்கோலம் பூண்டம் மதுரை மாநகரம்:

மேளதாளங்கள் முழங்க, யானை, டங்கா மாடு உள்ளிட்டவை அணிவகுத்துச் செல்ல, யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்கள் புறப்பட்டு கோயிலுக்குள் உள்ள பரிவார தெய்வங்களின் சன்னதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகர், கூடல் குமாரர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, மகாலட்சுமி, பத்ரகாளி, அக்னி வீரபத்திரர், 63 நாயன்மார்கள், நவகிரகங்கள் உள்ளிட்ட 414 பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் மகா கும்பாபிஷேக விழா காலை முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் கோஷம் விண்ணை முட்ட நடந்த கும்பாபிஷேகம்:

அதிகாலை 3.45 மணிக்கு பன்னிரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து, யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கலசங்கள் சிவாச்சாரியார்களால் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளிட்ட 12 கோபுரங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

மேலும் படிக்க: மதுரை போகப்போறீங்களா? பக்தர்களுக்காக பறந்து வந்த தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு!

இதையடுத்து, காலை 7.40 மணிக்கு கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது.  தொடர்ந்து, காலை 8.10 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், காலை 8.50 மணிக்கு சுந்தரேஸ்வரருக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி:

மகா கும்பாபிஷேக விழா நிறைவடைந்த பின்னர், காலை 10 மணி முதல் இரவு வரை கோயில் நடை சாத்தப்படாமல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்களே கவனியுங்கள்… பொது தரிசன நேரம் இதுதான்!

கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் தங்களது வீடுகளின் மேற்கூரைகளில் ஏறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மன் கோயிலில் நேரடியாக சுவாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்களுக்காக, இன்று இரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர்.

சிறப்பு தரிசனம் – கட்டண தரிசனம் ரத்து:

மீனாட்சியம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாநகரமே விழாவைக் கொண்டாடி வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து வருகை தந்து சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக கோயில் நிர்வாகம் சார்பிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களாக சிறப்பு தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைத்து பக்தர்களும் ஒரே முறையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Follow Us