மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா.. ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னாதானம்..
Meenakshi Amman Temple: சாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காலை மற்றும் மதியம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட இருக்கிறது. சேதுபதி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 16, 2026: மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா செப்டம்பர் 17ஆம் தேதி மிக விமரிசையாக நடைபெற இருக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதி மதுரையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா:
மீனாட்சியம்மன் கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருக்கிறது. கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை, ஆவணி, மாசி ஆகிய வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதிக்குள் சரக்கு மற்றும் கனரக வாகனங்களுக்கும் அனுமதி இல்லை.
மேலும் படிக்க: வந்தது குட் நியூஸ்!.. ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்.. தேதியை அறிவித்தது தமிழக அரசு!!
மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு கண்காணிப்பு கோபுரங்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்:
இந்தச் சூழலில், சாமி தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காலை மற்றும் மதியம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட இருக்கிறது. சேதுபதி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அங்கு சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான சமையல் பணியாளர்கள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க: “8 மணி நேர சோதனை!”… நடந்தது என்ன? வெளியே வந்தவுடன் அன்பில் மகேஷ் சொன்ன அதிர்ச்சி தகவல்!!
வழக்கமாக சித்திரை திருவிழாவின் போது, கடைசி நாளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தின்போதும் இந்த உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு அன்னதானம் வழங்கப்படும். அதேபோல, இந்த மகா கும்பாபிஷேக விழாவை ஒட்டி இந்தப் பள்ளியில் சிறப்பு அன்னதான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
12 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கும்பாபிஷேக விழா:
மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உலகப் பிரசித்தி பெற்றதாகும். கோயிலில் கடந்த 2009ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதியாகும். இந்தச் சூழலில், செப்டம்பர் 17ஆம் தேதி, அதாவது நாளை, மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது.
இதற்கிடையே, பல மாதங்களாக ராஜகோபுரம் உட்பட கோயிலின் அனைத்து பகுதிகளிலும் ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று நிறைவு பெற்று, கோயில் கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையில் உள்ளது.
யாகசாலைகள் மூலம் சிறப்பு பூஜைகள்:
இதற்காக பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு, முதல் கால பூஜை செப்டம்பர் 11ஆம் தேதி மாலையில் தொடங்கியது. செப்டம்பர் 15ஆம் தேதி காலை எட்டாம் கால யாக பூஜையும், மாலை ஒன்பதாம் கால யாக பூஜையும் நடைபெற்றன. 40-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் இந்தப் பூஜைகளில் கலந்து கொண்டுள்ளனர்.
கும்பாபிஷேக நாளான நாளை அதிகாலை 4 மணியளவில் பன்னிரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர் காலை 5.45 மணியளவில் புறப்பாடு நடைபெறுகிறது. காலை 7.40 மணிக்கு ராஜகோபுரங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கும், 7.55 மணிக்கு மீனாட்சியம்மனுக்கும், 8.10 மணிக்கு சுந்தரேஸ்வரருக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, பலத்த பாதுகாப்பும் செய்யப்பட்டு வருகிறது.