“8 மணி நேர சோதனை!”… நடந்தது என்ன? வெளியே வந்தவுடன் அன்பில் மகேஷ் சொன்ன அதிர்ச்சி தகவல்!!
Anbil Mahesh slams tvk govt: "மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை!" – சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல்துறையினர் தனது வீட்டில் நடத்திய 8 மணி நேரச் சோதனைக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டமான பேட்டியளித்துள்ளார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கும் மடைமாற்ற அரசியலுக்கும் திமுக ஒருபோதும் அஞ்சாது என்றும், செப்டம்பர் 18-ல் விசாரணைக்கு ஆஜராவதாகவும் அவர் கூறினார்.
திருச்சி, செப்டம்பர் 16: தமிழ்நாடு அரசியலில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான காரசாரமான விவாதங்களும் அரசியல் நகர்வுகளும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. இச்சூழலில், திமுகவின் முதன்மை நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷின் இல்லத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. காலையில் தொடங்கி சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனைக்குப் பின்னர், வீட்டின் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷ், காவல்துறையின் விசாரணை மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் குறித்து மிகக் காட்டமான கருத்துக்களை முன்வைத்தார்.
இதையும் படிக்க: விஜய் சேதுபதி விவகாரம்: பொதுவான கருத்துக்கு தவெகவினர் கொந்தளிப்பது ஏன்?.. சீமான் சரமாரி கேள்வி!!
8 மணி நேரமாக நடந்த சோதனை:
தனது இல்லத்தில் நடைபெற்ற சோதனை குறித்துப் பேசிய அன்பில் மகேஷ், “காலை 7:40 மணிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவைச் சேர்ந்த உதவி ஆணையர் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனைக்காக வந்தனர். அவர்கள் வந்தவுடனேயே வீட்டின் அனைத்து அறைகளையும் திறந்து காண்பித்து முழு ஒத்துழைப்பு அளித்தேன். சோதனை முடிவில், நான் பள்ளி இடைநின்ற மாணவர்கள் மற்றும் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக வைத்திருந்த துறை சார்ந்த கோப்புகள், மாவட்ட வாரியான ஆய்வு ஆவணங்கள் சிலவற்றை மட்டுமே அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்” எனத் தெரிவித்தார். மேலும், வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு காவல்துறை சார்பில் சம்மன் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு 100% முழு ஒத்துழைப்பு வழங்கி ஆஜராவேன் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை:
இந்தச் சோதனையின் பின்னணியில் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதாகக் குற்றம் சாட்டிய அன்பில் மகேஷ், “சட்டமன்றத்திலோ அல்லது மக்கள் மன்றத்திலோ அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டிப் பேசினால் உடனடியாக வீட்டிற்கு ரைடு அனுப்புகிறார்கள். புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தில் கஜானா காலி எனக் கூறுவது குறித்தும், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சியின் முகத்தில் கரிய பூசும் வகையில் வெற்றி பெற வேண்டும் எனப் பேசியதற்காகவும் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் எழும் எதிர்ப்புகளைத் திசைதிருப்பவே இதுபோன்ற ‘டேக் டைவர்ஷன்’ வேலைகளை அரசு செய்கிறது” எனச் சாடினார்.
இதையும் படிக்க: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்குமா? அடுத்தடுத்து தாக்கலாகும் தேர்தல் தடை மனுக்கள்.. பின்னணி என்ன!
நாங்கள் பயப்பட மாட்டோம்:
சோதனை முடிந்து செப்டம்பர் 18-ல் விசாரணையை எதிர்கொண்ட அடுத்த நிமிடமே தாம் நேராகத் தாராபுரம் இடைத்தேர்தல் களம் நோக்கிச் செல்லவிருப்பதாக அன்பில் மகேஷ் தெரிவித்தார். “திமுக என்பது 77 ஆண்டுகால பாரம்பரியமிக்க இயக்கம். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என நினைப்பது போல், இதுபோன்ற சலசலப்புகளுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ திமுக தொண்டர்கள் அஞ்ச மாட்டார்கள். சட்டரீதியாக நீதிமன்றத்தை நாடி உண்மையை நிலைநாட்டுவோம். இடைத்தேர்தலில் எங்களது மாபெரும் வெற்றியை நிச்சயம் பதிவு செய்வோம்” என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.