AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விஜய் சேதுபதி விவகாரம்: பொதுவான கருத்துக்கு தவெகவினர் கொந்தளிப்பது ஏன்?.. சீமான் சரமாரி கேள்வி!!

NTK Seeman Slams New Secretariat Project: "புதிய தலைமைச் செயலகம் அமைப்பது மக்கள் பணத்தை வீணடிக்கும் செயல்" எனக் கடுமையாகச் சாடியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய் சேதுபதியின் பொதுவான கருத்துக்காகத் தமிழக வெற்றிக் கழகத்தினர் கொந்தளிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேகமலை, பட்டினப்பாக்கம் மீனவர் பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விஜய் சேதுபதி விவகாரம்: பொதுவான கருத்துக்கு தவெகவினர் கொந்தளிப்பது ஏன்?.. சீமான் சரமாரி கேள்வி!!
சீமான், விஜய் சேதுபதி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 16 Sep 2026 14:24 PM IST

சென்னை, செப். 16: தமிழ்நாட்டில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் அமைப்பது தொடர்பான அரசின் அறிவிப்பும், அதைத் தொடர்ந்து எழுந்துள்ள பல்வேறு அரசியல் நகர்வுகளும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இச்சூழலில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசின் நிர்வாகக் முடிவுகள், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் கலை-அரசியல் சர்ச்சைகள் குறித்துத் தனது வழக்கமான பாணியில் காட்டமான கருத்துக்களை முன்வைத்தார். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தலைமைச் செயலகத்தில் எந்தக் குறையும் இல்லாத நிலையில், புதிய கட்டிடம் கட்டுவது மக்களின் வரிப்பணத்தை அப்பட்டமாக வீணடிக்கும் செயல் எனச் சாடிய அவர், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்குப் பதிலாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த உள்ளூர் முதலாளிகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற மாற்றுப் பொருளாதாரக் கருத்தையும் முன்வைத்தார். அத்துடன், நடிகர் விஜய் சேதுபதியின் கருத்து குறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) கொந்தளிப்பது தேவையற்றது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்குமா? அடுத்தடுத்து தாக்கலாகும் தேர்தல் தடை மனுக்கள்.. பின்னணி என்ன!

ஓமந்தூரார் வளாகம் இருக்கையில் தேவையா?

புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் குறித்துப் பேசிய சீமான், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ரூ.600 கோடி செலவில் ஓமந்தூரார் வளாகத்தில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் கட்டப்பட்டதை நினைவுகூர்ந்தார். பின்னர் வந்த ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் அக்கட்டிடம் அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டபோதே, அதைத் தலைமைச் செயலகமாகப் பயன்படுத்தக் கோரி எவரும் குரல் கொடுக்காதது ஏன் என்று வினவினார். தற்போதைய தலைமைச் செயலகக் கட்டிடம் சிறப்பாக இயங்கி வரும் சூழலில், மீண்டும் ரூ.1,200 கோடியை ஒதுக்கிப் புதிய கட்டிடம் கட்டுவது என்ன மாதிரியான நிர்வாக முறை என அவர் கேள்வி எழுப்பினார்.

வாழ்விட இழப்பும் மக்கள் போராட்டங்களும்:

சென்னையில் எங்கு புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டினாலும் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று எனச் சுட்டிக்காட்டிய சீமான், இத்தகைய பெரிய திட்டங்களுக்காகப் பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் வாழ்விடங்களை அப்புறப்படுத்துவதை ஏற்க முடியாது என்றார். சொந்தத் தாய்நிலத்திலேயே மக்களை அகதிகளாக்கும் நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்றும் எச்சரித்தார். மேலும், மேகமலைப் பகுதி மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள், மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் சிக்கல்கள் மற்றும் பட்டினப்பாக்கம் மீனவர்களின் கோரிக்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தாத அரசு, தேவையில்லாத விளம்பரங்களிலும் கட்டிடத் திட்டங்களிலுமே கவனம் செலுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.

வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிர்ப்பு:

தமிழக அரசு வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்து வருவதாகக் கூறுவது குறித்துப் பேசிய சீமான், தாம் வெளிநாட்டு முதலீடுகளுக்கு நேர் எதிரான கொள்கையைக் கொண்டவன் என்று தெளிவுபடுத்தினார். “ஜெயலலிதா ஆட்சிக்காலம் முதலே உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அதில் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கிறது” என்று சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலாக, “நமது சொந்த மண்ணில் உருவாகி வளர்ந்த எச்.சி.எல் (HCL) சிவ நாடார், லாட்டரி அதிபர் மார்ட்டின் போன்ற தேசிய முதலாளிகளிடம் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்யும் வசதி உள்ளது. அவர்களிடம் பேசி இங்கேயே தொழிற்புரட்சியை ஏற்படுத்தாமல், வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பது ஏன்?” எனப் பொருளாதார ரீதியிலான மாற்றுக் கேள்வியையும் எழுப்பினார்.

இதையும் படிக்க: மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. க்யூ ஆர் கோடுடன் வாகன நிறுத்துமிடம்!

விஜய் சேதுபதி விவகாரம்: தவெகவினருக்கு சீமான் கேள்வி:

நடிகர் விஜய் சேதுபதியின் சமீபத்திய கருத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்துப் பேசிய சீமான், “அரசியல் தெரிந்தவர்கள் அரசியல் பேசுபவர்களிடம் பேசலாம்; ஆனால் அவதூறு பேசுபவர்களிடம் பேச முடியாது” என்றார். மேலும், “முன்னாள் அரசு அதிகாரி இறையன்பு ஐ.ஏ.எஸ் எழுதிய ‘வையத் தலைமை கொள்’ என்ற புத்தகத்தில் ‘ஒரு தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்’ என்பது போன்ற உலகளாவிய பொதுக் கோட்பாடுகள் எழுதப்பட்டுள்ளன. அதையேதான் தம்பி விஜய் சேதுபதியும் ஒரு பொதுக் கருத்தாகப் பதிவிட்டுள்ளார். அந்தப் பொதுவான கருத்தைச் சொந்த விருப்பங்களின் அடிப்படையில் தங்கள் மீது பொருத்திக்கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) ஏன் கொந்தளிக்க வேண்டும்?” என வினவினார். “அவர் சொன்னது போல நீங்களும் பிரச்சனைகளைச் சந்திக்காமல் ஓடுகிறீர்களா என்றால், அதற்கு ஒன்றும் செய்ய முடியாது” என்றும் தெரிவித்தார்.

Follow Us