AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. குடியிருப்போர் கணக்கெடுப்பு தொடக்கம்.. கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!

New Secretariat Pattinapakkam: சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முதற்கட்ட கள ஆய்வுகள் மற்றும் குடியிருப்புப் பகுதி கணக்கெடுப்புப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. இத்திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் உள்ளூர் மீனவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இடநெருக்கடியைக் காரணம் காட்டி இத்திட்டத்திற்கான நியாயத்தை அரசுத் தரப்பு எடுத்துரைத்துள்ளது.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. குடியிருப்போர் கணக்கெடுப்பு தொடக்கம்.. கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!
பட்டினப்பாக்கம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 12 Sep 2026 13:39 PM IST

சென்னை, செப்.12: தமிழ்நாட்டின் நிர்வாக மையமான தலைமைச் செயலகம் தற்போது சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வளாகத்தில் இடநெருக்கடி அதிகரித்து வருவதால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தைக் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் சுமார் 26.5 ஏக்கர் பரப்பளவில், 15 தளங்களுடன் 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர் குடும்பங்கள் குறித்த விரிவான கள ஆய்வும், குடியிருப்போர் வகைப்பாடு கணக்கெடுப்புப் பணிகளும் தற்போது பட்டினப்பாக்கத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்க: இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவா? திடீர் நிபந்தனை விதித்த இந்திய கம்யூனிஸ்ட்? என்ன அது!

அரசுத் தரப்பின் முதற்கட்ட நடவடிக்கை:

பட்டினப்பாக்கம் பகுதியில் கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கியுள்ள அதிகாரிகள், அங்குள்ள குடியிருப்புவாசிகளைத் துல்லியமாக மூன்று முதன்மைப் பிரிவுகளாகப் பிரித்துத் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். ஏற்கனவே அரசு குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று வாழ்பவர்கள் முதல் வகையாகவும், புதிய வீடு ஒதுக்கீட்டிற்காக விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்கள் இரண்டாம் வகையாகவும், எவ்வித அதிகாரப்பூர்வ அனுமதியுமின்றி ஆக்கிரமிப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் மூன்றாம் வகையாகவும் பிரிக்கப்பட்டுப் பட்டியலிடப்படுகின்றனர். திட்டப் பணிகள் முழுமையாகத் தொடங்குவதற்கு முன்பாக, தகுதியுள்ள குடியிருப்பாளர்களுக்கு மாற்று உறைவிட வசதிகளை முன்னதாகவே உறுதிசெய்து, தடையற்ற முறையில் நிலத்தைக் கையகப்படுத்துவதையே அரசு தனது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு:

அதேவேளையில், கடலோரப் பகுதியான பட்டினப்பாக்கத்தில் இவ்வளவு பெரிய மதிப்பீட்டில் புதிய நிர்வாக வளாகத்தைக் கட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழ்நாட்டின் பொருளாதாரச் சூழல் மற்றும் விவசாயப் பிரச்சனைகள் சவாலாக இருக்கும் இக்காலக்கட்டத்தில், கடன்களை வாங்கி ரூ.1,200 கோடியில் புதிய கட்டிடம் எழுப்புவது தேவையற்ற விரயம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். மேலும் அடர்ந்த ஜனத்தொகை கொண்ட கடலோரப் பகுதியில் இத்திட்டம் அமைவது அப்பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதேபோல், சென்னை மாநகர எல்லைக்குள் இவ்வளவு பெரிய வளாகத்தைக் கொண்டுவருவது போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரிக்கும் என்றும், நெய்தல் நிலச் சூழலியல் மற்றும் கடலோரக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் என்றும் மதிமுக நிர்வாகி துரை வைகோ தனது கவலையைப் பதிவுசெய்துள்ளார்.

பொதுமக்களின் வாழ்வாதாரக் கவலை:

பட்டினப்பாக்கம் மற்றும் மெரினா லூப் சாலைப் பகுதிகளில் பல தலைமுறைகளாக வசித்து வரும் 1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள், படகுகளை நிறுத்துவதற்கும், வலைகளைப் பழுதுபார்ப்பதற்கும், கருவாடு காயவைப்பதற்கும் இந்தப் பகுதியையே முதன்மையாக நம்பியுள்ளனர். புதிய கட்டுமானத்தால் தங்களின் வாழ்வாதாரமும், கடலுக்குச் செல்லும் வழியும் முற்றிலும் பாதிக்கப்படும் என அஞ்சும் உள்ளூர் மீனவ அமைப்புகளும் சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்றக் கோரி போராட்டம் அறிவித்துள்ளன. மற்றொருபுறம், இத்திட்டத்தால் சாந்தோம் மற்றும் பட்டினப்பாக்கம் சந்திப்பில் ஏற்படக்கூடிய கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கையாள, கலங்கரை விளக்கத்தில் இருந்து அடையாறு திரு.வி.க. பாலம் வரை 3.5 கி.மீ நீளத்திற்கு உயர்மட்டப் பாதை அமைக்கவும் அரசு திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தவெக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும்.. கம்யூனிஸ்ட் கட்சியை டார்கெட் செய்கிறாரா… கே.ஏ. செங்கோட்டையன்!

இடநெருக்கடியும் புதிய வளாகத்தின் அவசியமும்:

எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், திட்டத்தின் அவசியத்தைக் கே. ஏ. செங்கோட்டையன் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். தற்போது இயங்கி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் வெறும் 4.5 ஏக்கர் அளவிலான குறுகிய பரப்பளவிலேயே அமைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிர்வாகத் தேவைகள், மக்கள் சந்திப்புகள் மற்றும் நவீனக் தொழில்நுட்பக் உள்கட்டமைப்புகளுக்கு இந்தப் பரப்பளவு முற்றிலும் போதுமானதாக இல்லை என்று அவர் தெரிவித்தார். எந்தவொரு புதிய பெருந்திட்டமும் கொண்டுவரப்படும் போது இயல்பாகவே எதிர்க்கட்சிகளிடமிருந்து விமர்சனங்கள் எழுவது வாடிக்கைதான் என்றும், அனைத்து சவால்களையும் கையாண்டு மாநிலத்தின் எதிர்கால நிர்வாக வசதிக்காக இப்புதிய தலைமைச் செயலகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த அரசு உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Follow Us