கணவரை பிரிந்து தனியாக வசித்த பெண்.. கழுத்தறுத்த நிலையில் சடலமாக மீட்பு.. திண்டுக்கல்லில் பகீர் சம்பவம்!
Dindigul Woman Murdered : திண்டுக்கல் மாவட்டத்தில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த பெண்ணை மர்ம நபர்களை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் ( 26 வயது). இவரது கணவர் ஜெயசீலன் நில அளவை துறையில் சார் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து காளியம்மாள் அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை காளியம்மாளை பார்ப்பதற்காக அவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் சென்றுள்ளனர். அவர்கள் வீட்டின் கதவு திறந்து கிடந்த நிலையில், உள்ளே சென்றனர். அப்போது, காளியம்மாள் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக, பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை
அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட காளியம்மாளின் சடலத்தை மீட்டு உடல் கூராய்வு மேற்கொள்வதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், காளியம்மாளின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
மேலும் படிக்க: காதலி பேச மறுத்ததால் சோகம்.. கன்னியாகுமரியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. போலீசார் விசாரணை!
கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. காளியம்மாளின் வீட்டுக்கு வந்து சென்றது யார் என்பது குறித்தும், அவரது செல்போனில் கடைசியாக தொடர்பு கொண்ட நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காளியம்மாள் கணவரிடம் போலீசார் விசாரணை
இதனிடையே, காளியம்மாள் கணவரான ஜெயசீலன் என்பவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதில், குடும்ப பிரச்சனை காரணமாக காளியம்மாள் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. குடியிருப்பு பகுதியில் வீட்டில் உள்ளே இளம் பெண் கொடூரமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: திண்டுக்கல்லில் சோகம்.. பைக் மீது மோதிய கார்.. நாளை திருமணம் நடக்க இருந்த பெண் பலி.. அவசர சிகிச்சையில் ராணுவ வீரர்!