“அன்புத் தாய்மார்களே”.. அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!
Solomon Pappaiah Funeral: பிரபல தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக காலமானார். மதுரையில் 10 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தத்தநேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. "நான் பெரியாரின் தொண்டன், மதச் சடங்குகளில் நம்பிக்கையில்லை" என்ற அவரது உயில் விருப்பத்தின்படியே உடல் தகனம் செய்யப்பட்டது.
மதுரை, செப்டம்பர் 12: தமிழக அரசு மரியாதையுடன் தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தனது இயல்பான மதுரை பேச்சு வழக்காலும், எளிமையான நகைச்சுவை பாணியாலும் தமிழை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தப் புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். மதுரை ஞானஒளிபுரம் விசுவாசபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் தமிழ் அறிஞர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தமிழார்வலர்கள் நேரில் வருகை தந்து அவரது உடலுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் படிக்க: Solomon Pappaiah : பேராசியர்.. நடுவர்.. நடிகர்.. சாலமன் பாப்பையா கடந்து வந்த பாதை!
முழு அரசு மரியாதையும், பிரியாவிடையும்:
தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், விஸ்வநாதன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சாலமன் பாப்பையாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, 10 காவலர்கள் துப்பாக்கிகளை ஏந்தி 10 குண்டுகள் முழங்கத் தமிழ்நாடு அரசின் முழு அரசு மரியாதை அவருக்கு வழங்கப்பட்டது. “தமிழ் வாழ்க! தமிழ் வெல்க!” என்ற முழக்கங்களுக்கு இடையே, மேடைகளில் பல நூற்றுக்கணக்கான பேச்சாளர்களை உருவாக்கிய தமிழறிஞர்கள் மற்றும் அவரது சீடர்கள் சூழ, அவரது இறுதி ஊர்வலம் மதுரையின் முக்கிய வீதிகள் வழியாக விமரிசையாக நடைபெற்றது.
மதச் சடங்குகளைத் தவிர்த்து தகனம்:
பிறப்பால் கிறிஸ்தவராக இருந்தாலும், சடங்குகள் மற்றும் மத நம்பிக்கைகளில் தனக்கு ஈடுபாடு இல்லை என்பதைச் சாலமன் பாப்பையா வெளிப்படையாகப் பின்பற்றி வந்தார். “நான் தந்தை பெரியாரின் தொண்டன்; எனக்கு மத நம்பிக்கைகளில் உடன்பாடில்லை. எனவே எனது மறைவிற்குப் பின் உடலை அடக்கம் செய்யாமல் தகனம் செய்ய வேண்டும்” என்று அவர் ஏற்கனவே உயில் எழுதி வைத்திருந்தார். அவரது அந்த இறுதி விருப்பத்திற்கு மதிப்பளித்து, மதுரை தத்தநேரி மின் மயானத்தில் அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
மேலும் படிக்க: அன்பு தாய்மார்களே!… பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார் – ரசிகர்கள் சோகம்
சாதனைகள் நிறைந்த வாழ்வு:
1936-ஆம் ஆண்டு பிறந்த சாலமன் பாப்பையா, இலக்கியக் கருத்துக்களையும் கடினமான கோட்பாடுகளையும் சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் கொண்டு சேர்த்தவர். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களில் நடுவராகச் செயல்பட்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்களைத் தன் பேச்சால் கட்டிப்போட்டார். இவரது அளப்பரிய தமிழ் சேவையைப் பாராட்டி தமிழ்நாடு அரசு 2000-ஆம் ஆண்டில் ‘கலைமாமணி’ விருதையும், இந்திய அரசு 2021-ஆம் ஆண்டில் ‘பத்மஸ்ரீ’ விருதையும் வழங்கி கௌரவித்தது. பட்டிமன்றம் மட்டுமன்றி ‘முதல்வன்’, ‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.