AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம்.. எதிர்க்கும் அரசியல் தலைவர்கள்.. பின்னணி என்ன?

New Secretariat in Pattinapakkam: சென்னை பட்டினப்பாக்கத்தில் 26 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், அப்பகுதி மீனவ மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விரிவான செய்தித் தொகுப்பு இதோ.

பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம்.. எதிர்க்கும் அரசியல் தலைவர்கள்.. பின்னணி என்ன?
பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலம் அமைய உள்ள இடம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 11 Sep 2026 10:02 AM IST

சென்னை, செப்டம்பர் 11: தமிழ்நாட்டின் முதன்மை நிர்வாக மையமான தலைமைச் செயலகத்திற்குப் புதிய வளாகம் அமைப்பது தொடர்பான விவாதம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் 26.36 ஏக்கர் பரப்பளவில், ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற பேரவை வளாகம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியான நொடியிலிருந்து அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் நிலவும் கடும் இடநெருக்கடி, போதிய வாகன நிறுத்த வசதியின்மை மற்றும் துறைச் செயலர்களின் அலுவலகங்கள் வெவ்வேறு இடங்களில் சிதறி இருப்பதைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: “கட்டணக் கொள்ளையை ஆதரிக்கிறதா தவெக அரசு?”.. ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் சாடல்!!

110-ன் கீழ் அரசாணை, இடத்தேர்வு விவரங்கள்:

சட்டமன்றப் பேரவையில் அரசமைப்பு விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான நிலங்கள் இத்திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் 15 மாடிக் கட்டிடமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த வளாகத்திற்கு, வடிவமைப்பு, திட்ட அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுக்காகத் தனித்தனிக் குழுக்களை அமைக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சாந்தோம் மற்றும் பட்டினப்பாக்கம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கையாள லைட்ஹவுஸ் முதல் அடையாறு வரை 3.5 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டவும் நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு வருகிறது.

அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டும் சிக்கல்:

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இத்திட்டத்திற்குத் தனது காரசாரமான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். “சாந்தோம் மற்றும் பசுமைவழிச் சாலைகளில் ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வரும் நிலையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்தைக் கொண்டு வருவது நிலைமையை மேலும் மோசமாக்கும். அருகில் உள்ள பள்ளிகள், சாந்தோம் தேவாலயம் மற்றும் அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். மேலும், வெறும் 26 ஏக்கர் நிலப்பரப்பு என்பது ஒரு ஒருங்கிணைந்த தலைமைச் செயலகத்திற்குப் போதுமானது அல்ல. எனவே அவசரப்படாமல், அடுத்த 100  ஆண்டுகால தேவைகளைக் கருத்தில் கொண்டு சென்னைக்கு வெளியே 500 முதல் 1,000 ஏக்கரில் பரந்த ‘ஒருங்கிணைந்த நிர்வாக நகரம்’ அமைக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

டிடிவி தினகரன் சாடும் சர்வாதிகாரப் போக்கு:

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். “சட்டமன்றத்தில் எவ்வித ஜனநாயக விவாதமும் இன்றி 110 விதியின் கீழ் திட்டத்தை அறிவித்து, அவசரகதியில் பட்டினப்பாக்கத்தைத் தேர்வு செய்திருப்பது அரசின் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுகிறது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் வந்து செல்ல வேண்டிய ஒரு மையத்தைப் பட்டினப்பாக்கம் போன்ற நெருக்கடியான கடலோரப் பகுதியில் அமைத்தால், அது கட்டுப்படுத்த முடியாத பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களைத் தோற்றுவிக்கும். எனவே இந்த இடத்தேர்வை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” எனச் சாடியுள்ளார்.

பாஜக கண்டனம், மீனவர் வாழ்வாதாரக் கவலை:

பாரதிய ஜனதா கட்சி தரப்பிலும் இத்திட்டத்திற்கு வீரியமிக்க எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தைக் கொண்டு வருவது பாரம்பரிய மீனவச் சமூகத்தினருக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் என பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளை மீறி, இயற்கைச் சீற்றங்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதியில் இவ்வளவு பெரிய கட்டுமானத்தை மேற்கொள்வது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்றும், சுனாமி போன்ற பேரிடர்களின் போது இக்கட்டிடம் பெரும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும் என்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் படிக்க: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?.. ஏரிகளில் 44% மட்டுமே நீர் இருப்பு.. சவாலை சமாளிக்குமா அரசு?

மீனவர்களின் வீதிப்போராட்ட எச்சரிக்கை:

அரசியல் தலைவர்களின் விமர்சனங்களுக்கு இடையே, பட்டினப்பாக்கம் பகுதி மீனவ மக்களும் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். புதிய தலைமைச் செயலகம் அமைந்தால் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் காரணம்காட்டித் தங்களது அன்றாட மீன்பிடித் தொழிலும் கடலுக்குச் செல்லும் வழிகளும் முடக்கப்படும் என அவர்கள் அச்சப்படுகின்றனர். இத்திட்டத்திற்கு எதிராகப் பழவேற்காடு முதல் கோவளம் வரையிலான மீனவக் கிராமப் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தவும், அரசு திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடவும் மீனவ அமைப்புகள் தீர்மானித்துள்ளன. எதிர்ப்புகள் முற்றும் நிலையில், அரசு இத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமா அல்லது மாற்று இடத்தை மறுபரிசீலனை செய்யுமா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us