AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?.. ஏரிகளில் 44% மட்டுமே நீர் இருப்பு.. சவாலை சமாளிக்குமா அரசு?

Chennai Drinking Water Crisis: சென்னை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் நீர்மட்டம் வேகமாகச் சரிந்து, தற்போது 44 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைப்பொழிவு கணிசமாகக் குறைந்ததே இதற்கு முக்கியக் காரணம். வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே சென்னையின் குடிநீர் தேவையை தடையின்றி பூர்த்தி செய்ய முடியும் என்ற சூழல் நிலவுகிறது.

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?.. ஏரிகளில் 44% மட்டுமே நீர் இருப்பு.. சவாலை சமாளிக்குமா அரசு?
சென்னை செம்பரம்பாக்கம் ஏரி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 11 Sep 2026 06:27 AM IST

சென்னை, செப்டம்பர் 11: சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் சென்னை பெருநகரம் மற்றும் அதன் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளின் தினசரி குடிநீர் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்வது என்பது எப்போதும் பெருநகராட்சி நிர்வாகத்திற்கும் குடிநீர் வாரியத்திற்கும் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. தலைநகர் சென்னையின் நாள் ஒன்றுக்கான மொத்த குடிநீர் தேவை சுமார் 1,200 மில்லியன் லிட்டராக உள்ளது. சென்னை மக்களின் இந்த அத்தியாவசியத் தேவையை நிறைவு செய்யப் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை தெருவாய்க்கண்டிகை ஆகிய முதன்மை குடிநீர் ஆதார ஏரிகளும், கடலூரில் உள்ள வீராணம் ஏரியும், கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்களுமே பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது இந்த முக்கியக் குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாகச் சரிந்து, நீரிருப்பு கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதால், வரவிருக்கும் நாட்களில் சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சமும் அபாயமும் நிலவி வருகிறது.

இதையும் படிக்க: மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. திமுக சார்பில் களமிறங்கும் பரந்தாமன்- சுகன்யா.. முழு பின்னணி இதோ!

ஏரிகளில் வேகமாகச் சரியும் நீர்மட்டம்:

சென்னையின் முதன்மை நீர் ஆதாரங்களாகத் திகழும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் மற்றும் கண்ணன்கோட்டை தெருவாய்க்கண்டிகை ஆகிய 5 முக்கிய ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும். இருப்பினும், தொடர் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால், தற்போது இந்த 5 ஏரிகளிலும் சேர்த்து வெறும் 5,175 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதாவது, ஏரிகளின் மொத்தக் கொள்ளளவில் சுமார் 44 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல, சென்னைக்குத் தடையின்றி நீர் வழங்கும் மற்றொரு முக்கியமான நீர் ஆதாரமான வீராணம் ஏரியின் நீர்மட்டமும் மிகவும் கவலை அளிக்கும் வகையில் சரிந்துள்ளது. 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 174.75 மில்லியன் கன அடி மட்டுமே நீர் எஞ்சியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவுடன் நிரம்பி வழழிந்த நிலையில், தற்போது அங்கு நீரிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

மழைப்பொழிவு குறைவும் நிலவும் சவால்களும்:

சென்னைக்கு நீர்வரத்து தரும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை அளவு கணிசமாகக் குறைந்து போனதே இந்த திடீர் நீர்ச்சரிவுக்கு முக்கியக் காரணமாகும். குறிப்பாக, கடந்த காலங்களை விட செங்கல்பட்டு மாவட்டத்தில் இயல்பான மழை அளவைக் காட்டிலும் 56 சதவீதமும், திருவள்ளூர் மாவட்டத்தில் 27 சதவீதமும் மழைப்பொழிவு குறைந்துள்ளது. இதன் நேரடியாக விளைவாக, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து ஏரிகளுக்கு வரக்கூடிய நீரின் அளவு வெகுவாகப் பாதிக்கப்பட்டு, ஏரிகளின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்புத் திட்டங்களின் மூலம் சென்னை நகரின் மொத்த குடிநீர் தேவையில் சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், வெறும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களையும், தற்போதைய ஏரிகளின் சொற்ப நீரிருப்பையும் மட்டுமே நம்பி சென்னையின் பிரம்மாண்டமான குடிநீர் தேவையை நீண்ட காலத்திற்குத் தொடர்ச்சியாகச் சமாளிப்பது என்பது மிகக் கடினமான மற்றும் சவாலான காரியமாகும்.

இதையும் படிக்க: சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரணம்.. டிஎஸ்பி உள்பட 4 போலீசார் மீது கொலை வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பருவமழை எதிர்பார்ப்பும் எதிர்காலத் தீர்வுகளும்:

வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் எதிர்பார்த்த அளவு பெய்து கை கொடுத்தால் மட்டுமே, ஏரிகளின் நீர்மட்டத்தை மீண்டும் கணிசமாக உயர்த்த முடியும். இடைக்கால மற்றும் நீண்டகாலத் தீர்வாக, நகரில் உள்ள நீர்நிலைகள் மற்றும் வரத்துக் கால்வாய்களைத் தொடர்ந்து தூர்வாரிப் பாதுகாப்பதோடு, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மறுபயன்பாட்டுக்குக் கொண்டுவரும் நவீன தொழில்நுட்ப நடவடிக்கைகளை அரசு விரைவுபடுத்த வேண்டும். மேலும், கடல்நீரைக் குடிநீராக்கும் கூடுதல் திட்டங்களைச் செயல்படுத்தி மாற்று நீராதாரங்களை வலுப்படுத்துவதே சென்னைக்கு நிரந்தரப் பாதுகாப்பைத் தரும். முக்கிய ஏரிகளில் தற்போது பாதியளவிற்கும் குறைவாகவே நீர் எஞ்சியுள்ள நிலையில், வரவிருக்கும் பருவமழை எந்த அளவுக்குக் கை கொடுக்கப் போகிறது, இந்தச் சவாலை எதிர்கொள்ள தமிழக அரசும் குடிநீர் வாரியமும் எடுக்கப்போகும் அடுத்த கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதே தற்போதைய முக்கியக் கேள்வியாக உள்ளது.

Follow Us