AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்.. பாதிக்கப்படும் வங்கி சேவைகள்.. முன்வைக்கப்படும் கோரிக்கைகள் என்ன?

Bank Employees Strike: ஓய்வூதியத்தை புதுப்பித்து மேம்படுத்துதல், அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரே மாதிரியான அகவிலைப்படி கணக்கீட்டு முறையை அமல்படுத்துதல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வங்கி சங்கங்கள் முன்வைத்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்.. பாதிக்கப்படும் வங்கி சேவைகள்.. முன்வைக்கப்படும் கோரிக்கைகள் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 11 Sep 2026 07:01 AM IST

செப்டம்பர் 11, 2026: நாடு முழுவதும் வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் செப்டம்பர் 11-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகளின் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

பாதிக்கப்படும் வங்கி சேவைகள்:

இந்த வேலைநிறுத்தத்தால் வங்கிக் கிளைகளில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல் உள்ளிட்ட நேரடி சேவைகள் பாதிக்கப்படக்கூடும். செப்டம்பர் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதுடன், அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் வங்கி விடுமுறை என்பதால், நாட்டின் பல பகுதிகளில் வங்கி சேவைகள் தொடர்ந்து 4 நாட்கள் வரை பாதிக்கப்படும் சூழல் ஏற்படலாம். மேலும், செப்டம்பர் 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சில மாநிலங்களில் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இனி சிலிண்டர் புக்கிங்கிற்கு 45 நாட்கள் வேண்டாம்.. சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக குறைப்பு!

பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள், வேலைநிறுத்தத்தால் வங்கி சேவைகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிளைகள் மற்றும் அலுவலகங்களில் இயல்பான பணிகள் நடைபெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் வேலைநிறுத்தம் காரணமாக பணிகள் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்த போராட்டம்:

7 வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களை உள்ளடக்கிய United Forum of Bank Unions (UFBU), செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மேலும் 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

5 நாட்கள் பணி கோரி போராட்டம்:

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கி பணிகள் நடைபெற வேண்டும் என்பது வங்கி ஊழியர் சங்கங்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், தீர்வு ஏற்படவில்லை என சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க: BRICS 2026 மாநாட்டுக்கு இந்தியா தயார் – பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ

அரசு மற்றும் வங்கி நிர்வாகங்கள் 5 நாள் வங்கி சேவைக்கு உறுதியான உத்தரவாதம் வழங்காததால் போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக AIBOC பொதுச் செயலாளர் ரூபம் ராய் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், இந்திய ரிசர்வ் வங்கி, LIC, GIC மற்றும் NABARD உள்ளிட்ட நிறுவனங்களில் ஏற்கனவே 5 நாள் பணி முறை அமலில் இருப்பதாக NCBE பொதுச் செயலாளர் எல். சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  மேலும், பங்குச் சந்தை, பணச் சந்தை மற்றும் அந்நியச் செலாவணி சந்தை ஆகியவையும் 5 நாட்கள் அடிப்படையில் செயல்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கைகள் என்ன?

ஓய்வூதியத்தை புதுப்பித்து மேம்படுத்துதல், அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரே மாதிரியான அகவிலைப்படி கணக்கீட்டு முறையை அமல்படுத்துதல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வங்கி சங்கங்கள் முன்வைத்துள்ளன.

ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், செப்டம்பர் 11-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்துடன் போராட்டத்தை தொடங்குவதாக UFBU அறிவித்துள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், செப்டம்பர் 28 முதல் 30 வரை 3 நாட்கள் வேலைநிறுத்தமும், அக்டோபர் 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் நடத்தப்படும் என வங்கி ஊழியர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.

Follow Us