66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளி.. ரூ.703 கோடிக்கு காப்பீடு.. மும்பையில் தயாராகும் பிரம்மாண்ட விநாயகர்!
Mumbai Vinayagar Statute Insured For 703 Crore | விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மும்பையை சேர்ந்த ஒரு பகுதியில் மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.
மும்பை, செப்டம்பர் 07 : இந்தியாவில் இன்னும் ஒருசில நாட்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மும்பையில் (Mumbai) தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், அந்த விநாயகர் சிலை தங்கம் மற்றும் வெள்ளி நகைகளால் அலங்கரிக்கப்பட உள்ளது. அதுமட்டுமன்றி, அந்த சிலைக்கு பல கோடிகளில் காப்பீடும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மும்பையில் செய்யப்பட்டுள்ள அந்த சிறப்பு விநாயகர் சிலை குறித்து விரிவாக பார்க்கலாம்.
மும்பையின் பணக்கார விநாயகர் சிலை
மும்பையின் பணக்கார விநாயகர் மண்டலமாக கிங்கிஸ் சர்க்கிள் ஜி.எஸ்.பி சேவா மண்டல் உள்ளது. இந்த நிலையில், இந்த மண்டல் இந்த ஆண்டு தனது 72வது விநாயகர் சதுர்த்தியை செப்டம்பர் 14, 2026 முதல் செப்டம்பர் 18, 2026 வரை என மொத்தம் 5 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாட தயாராகி வருகிறது. இந்த நிலையில் தான், மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலையை தயார் செய்து அசத்தியுள்ளது.
இதையும் படிங்க : கேரளாவில் நடந்த கோர விபத்து – அப்பளம் போல் நொறுங்கிய கார்.. தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழப்பு




66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளி
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ள விநாயகர் சிலைக்கு பொதுமக்கள் காணிக்கையாக அளித்த சுமார் 66 கிலோ தங்கம் மற்றும் 335 கிலோ வெள்ளி ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட உள்ளது. இத்தகைய மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலைக்கு அந்த மண்டல் சுமார் ரூ.703 கோடியே 27 லட்சத்தில் காப்பீடு செய்துள்ளது.
இதையும் படிங்க : போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி…. விமானியை பணிநீக்கம் செய்த ஏர் இந்தியா
இந்த மண்டலில் கடந்த ஆண்டு ரூ.474 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களுக்கு சேர்த்து இந்த காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கும் சேர்த்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மெகா காப்பீடு திட்டத்தை எடுக்க காரணம் என்ன?
இது தொடர்பாக பேசிய அந்த மண்டலின் செய்தித் தொடர்பாளர் அமித் பை கூறியதாவது, பொறுப்புள்ள அமைப்பாக, விழாவுக்கு வரும் ஒவ்வொரு பக்தரின் பாதுகாப்புக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது எங்கள் கடமையாகும். அதனால் தான் இந்த மெகா காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.