விநாயகர் சதூர்த்தி.. மயிலாடுதுறையில் சூழல் நட்பு வண்ண விநாயகர் சிலைகள் தயார்!!
Vinayagar Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மயிலாடுதுறையில் வர்ணம் பூசப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு வண்ணமயமான விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணியில் கைவினைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாராகும் இச்சிலைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகச் விமரிசையாகவும் ஆன்மீக எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடுகளிலும், பொது இடங்களிலும் விதவிதமான விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு செய்வதும், பின்னர் அச்சிலைகளைக் நீர்நிலைகளில் கரைப்பதும் வழக்கமான மரபாக உள்ளது. இதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிலைகள் செய்யும் பணிகள் மாதக் கணக்கில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு வண்ணமயமான விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் பணியில் கைவினைஞர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
உருவாகும் வண்ணமயமான சிலைகள்:
மயிலாடுதுறை பகுதியில் தயாராகும் இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் களிமண், மரத்தூள் மற்றும் கிழங்கு மாவு போன்ற எளிய, இயற்கையில் எளிதில் மக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. நீர்நிலைகளின் மாசடைவதைத் தடுக்கும் பொருட்டு, இரசாயனப் பூச்சுகள் ஏதுமின்றி, நீரில் எளிதில் கரையக்கூடிய இயற்கை மற்றும் நீர்வண்ணக் கலவைகளே இச்சிலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு கலைநயமிக்க வடிவங்களில், கம்பீரமான மற்றும் சாந்தமான தோற்றங்களில் உருவாக்கப்படும் இந்த அழகிய விநாயகர் சிலைகள் பார்ப்போரின் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.
