தொடர் விடுமுறை.. தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.. 5 கி.மீ. தூரத்திற்கு ஸ்தம்பித்த போக்குவரத்து!!
Dhanushkodi Tourist Influx: தொடர் விடுமுறையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை பகுதிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால், சுமார் 5 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்குப் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை பகுதிகளுக்குத் தினந்தோறும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் அரசு விடுமுறை நாட்களில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில், தற்போதைய தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பயணிகள் ஒரே நேரத்தில் தனுஷ்கோடியை நோக்கிப் படையெடுத்தனர். இதனால் அரிச்சல்முனை செல்லும் கடல்வழிச் சாலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வாகன நெரிசல் ஏற்பட்டு அப்பகுதியே ஸ்தம்பித்தது.
5 கி.மீக்கும் அதிகமாக அணிவகுத்த வாகனங்கள்:
தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் முதல் நாட்டின் கடைசி எல்லைப் பகுதியான அரிச்சல்முனை வரை உள்ள சாலைகளில் கார்கள், சுற்றுலா வேன்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாகச் சுமார் 5 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்குப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மணி கணக்கில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்ததால், குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் வந்த சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
