கேரளாவில் நடந்த கோர விபத்து – அப்பளம் போல் நொறுங்கிய கார்.. தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழப்பு..
மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட அந்த லாரி சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. கார் அதிவேகமாக வந்த நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறத்தில் மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதிய வேகத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது. இதில் தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழந்தனர்.
செப்டம்பர் 5, 2026: கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பொறியியல் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பனம்பிக்கும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 66-ல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. குருவாயூர் பகுதியில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கி தமிழ்நாடு பதிவு எண் கொண்ட கார் சென்று கொண்டிருந்தபோது, சாலை கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது திடீரென மோதியது.
கேரளாவில் நடந்த கோர விபத்து – அப்பளம் போல் நொறுங்கிய கார்:
மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட அந்த லாரி சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. கார் அதிவேகமாக வந்த நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறத்தில் மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதிய வேகத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது.
விபத்தின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கார் முழுமையாக சேதமடைந்திருந்ததால், வாகனத்தை வெட்டி அகற்றியே உடல்களை மீட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும் படிக்க: பேரவை நிகழ்வுகள் ஏஐ கேமரா கண்ணாடி மூலம் படம்பிடிப்பு? அமைச்சர் முகமது பர்வேஸ் அளித்த பரபரப்பு விளக்கம்!
தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழப்பு:
இந்த விபத்தில் காரில் பயணித்த 8 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் சுமார் 20 வயதுடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்று வந்ததாக கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் கல்லூரி அடையாள அட்டையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உணவுப்படி உயர்வு முதல் புதிய வாகனம் வரை.. நிறைவேற்றப்பட்ட உடனடி வாக்குறுதிகள்.. ஒத்திவைக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டம்..
உயிரிழந்தவர்களில் சேலத்தைச் சேர்ந்த விஷ்வா, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யா மற்றும் யுவ சஞ்சித், மதுரையைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் பிரசன்னா ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றவர்களின் அடையாளங்களை உறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
காவல் துறையினர் விசாரணை:
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு உடற்கூராய்வு நடைபெற்று, பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட உள்ளன.
மேலும், சாலை கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் லாரிகள் முறையாக நிறுத்தப்படாமல் சாலையோரத்தில் நிறுத்தப்படுவதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.