AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உணவுப்படி உயர்வு முதல் புதிய வாகனம் வரை.. நிறைவேற்றப்பட்ட உடனடி வாக்குறுதிகள்.. ஒத்திவைக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டம்..

தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில், உணவுப்படி உயர்வு, கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதிகள், போராட்டம் தொடர்பான வழக்குகளை ரத்து செய்தல், புதிய வாகனங்கள் வழங்குதல், இழப்பீட்டுத் தொகை, நல வாரியம், மழைக்கால உபகரணங்கள், விடுப்பு மற்றும் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள், தொடர் ஆய்வுக் கூட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப்படி உயர்வு முதல் புதிய வாகனம் வரை.. நிறைவேற்றப்பட்ட உடனடி வாக்குறுதிகள்.. ஒத்திவைக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Sep 2026 07:28 AM IST

செப்டம்பர் 5, 2026: சென்னை ரிப்பன் மாளிகை பகுதியில் கடந்த 16 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மை பணிகளைத் தனியார்மயமாக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது.

தூய்மை பணியாளர்களிடம் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை:

இந்த நிலையில், அமைச்சர்கள் என்.ஆனந்தன், சி.டி.ஆர். நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தனர்.

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளில் உடனடியாக நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர்கள் உறுதியளித்தனர். மேலும், போராட்டத்தை கைவிட்டு சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தனர்.

தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்ட போராட்டம்:

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒரு சில கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

மேலும் படிக்க: செப்.9-ல் தவெக ஆதரவுக் கட்சிகளின் முக்கியக் கூட்டம்.. வைகோ, சிபிஐ, சிபிஎம் தலைவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் அழைப்பு!

இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், “15 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவர்களின் அடிப்படை உரிமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அவர்களுக்கு தேவையானவற்றை செய்வதில் மாற்றுக் கருத்து இல்லை. வழக்கறிஞர்கள், பெண்கள் என பலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

நிறைவேற்றப்பட்ட உடனடி கோரிக்கைகள்:

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் பெறப்படும். உடனடி இலக்கு மற்றும் ஒரு மாத இலக்கு என பிரித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். தூய்மை பணியாளர்களுக்கு தேவையான சில முக்கியமான விஷயங்களை உடனடியாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தூய்மை பணியாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரை ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு, தூய்மை பணியாளர்கள் முதலமைச்சரை விரைவில் சந்திப்பார்கள். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.

மேலும் படிக்க: கர்ப்பிணி காதலியை கொலை செய்த காதலன்.. சேலத்தில் பரபரப்பு சம்பவம்!

மேலும், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை அக்டோபர் 3ஆம் தேதி நடைபெறும் என்றும், தற்போதைக்கு 8 முதல் 10 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்படும் வழக்கு முதல் புதிய வாகனம் வரை வாக்குறுதிகள் என்ன?

முக்கியமாக, உணவுப்படி உயர்வு, கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதிகள், போராட்டம் தொடர்பான வழக்குகளை ரத்து செய்தல், புதிய வாகனங்கள் வழங்குதல், இழப்பீட்டுத் தொகை, நல வாரியம், மழைக்கால உபகரணங்கள், விடுப்பு மற்றும் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள், தொடர் ஆய்வுக் கூட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தூய்மை பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் அறிவிக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் சங்கம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என தூய்மை பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தூய்மை பணியாளர்கள் சங்கத்திற்காக அலுவலகம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு பரிசீலித்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us