செப்.9-ல் தவெக ஆதரவுக் கட்சிகளின் முக்கியக் கூட்டம்.. வைகோ, சிபிஐ, சிபிஎம் தலைவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் அழைப்பு!
TVK Allies Meeting: வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவுக் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைக்கோ, சிபிஐ, சிபிஎம் தலைவர்களை நேரில் சந்தித்துத் தவெக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சென்னை, செப்.05: தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவுக் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் தவெக ஆதரவுக் கட்சிகளின் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போதைய அரசியல் சூழல்கள், அடுத்தகட்டத் திட்டமிடல்கள் மற்றும் ஒருங்கிணைப்புகள் குறித்து விவாதிக்க இந்த முக்கியக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு ஆதரவுக் கட்சிகளின் முக்கியத் தலைவர்களை தவெக அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இதையும் படிக்க: இசக்கி சுப்பையா ராஜினாமா விவகாரம்.. பேரவை முடிந்த பின் முடிவு அறிவிப்பு.. சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!
வைகோ, இடதுசாரி தலைவர்களுக்கு அழைப்பு:
வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோருக்குத் தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தலைவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று இந்த அழைப்பிதழை வழங்கினர்.
அரசியல் களத்தில் சுறுசுறுப்பு:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்திற்கு நேரில் சென்ற குழுவினர், அவருக்குச் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி இக்கூட்டத்திற்கான அழைப்பை விடுத்தனர். அதேபோல், இடதுசாரித் தலைவர்களையும் நேரில் சந்தித்து இக்கூட்டம் குறித்த விவரங்களை எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும் தவெக பிரதிநிதிகள் விரைவில் சந்தித்து இக்கூட்டத்திற்கான அழைப்பை விடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசியல் களத்தில் மிக முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்பேன்:
இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, கூட்டத்தில் மதிமுகவின் பங்கேற்பை உறுதி செய்ததோடு, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து நடத்தப்படும் இத்தகைய ஆலோசனைக் கூட்டங்கள் ஜனநாயக ரீதியில் மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவதை வெகுவாகப் பாராட்டினார். “சட்டமன்ற நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படுவது மக்கள் மத்தியில் ஒரு தெளிவை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியினர் எவ்வளவு கணைகளை எய்தினாலும், அவற்றை இடைமறித்து அமைச்சர்கள் சிறப்பாகவும் திறமையாகவும் பதில் அளித்து வருகின்றனர். நிர்வாக ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் இது மக்களுக்கு மிகவும் பயனளிக்கிறது” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க : நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்கள்.. கண்டறிய உறவினர்களுக்கு இலவச டிஎன்ஏ சோதனை.. தமிழ்நாடு அரசு ஏற்பாடு!!
ஆட்சியில் ஊழலற்ற நிர்வாகம்:
ஆட்சி நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதே முதன்மை இலக்கு என்பதை சுட்டிக்காட்டிய வைகோ, “ஆர்டிஓ அலுவலகம், பதிவுத் துறை அலுவலகம் என எந்த துறையாக இருந்தாலும் ‘கமிஷன்’ என்ற பேச்சுக்கே இடமில்லாமல் முற்றிலும் ஊழலை ஒழிக்கும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது” எனக் கூறினார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைத் தாண்டி, மக்கள் மன்றத்தில் ஆளுங்கட்சி தனது ஆதரவைப் பெருக்கி வருவதுடன், ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதில் வெற்றி பெற்று வருகிறது என்றும், ஒரு அரசாங்கத்திற்கு இதைவிடச் சிறந்த மகுடம் வேறொன்றும் இருக்க முடியாது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.