நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்கள்.. கண்டறிய உறவினர்களுக்கு இலவச டிஎன்ஏ சோதனை.. தமிழ்நாடு அரசு ஏற்பாடு!!
Nepal floods missing Tamils: நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி மாயமான தமிழர்களை அடையாளம் காண்பதற்காக, அவர்களின் முதல் நிலை உறவினர்களுக்கு இலவச டிஎன்ஏ பரிசோதனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 'சென்னை, மதுரை, தஞ்சாவூரில் தடைய அறிவியல் மையங்கள் மூலம் இந்தச் சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர், 04: நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, கைலாச யாத்திரை மற்றும் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் பலர் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணிகளைத் தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு மற்றும் நேபாள அரசுடன் இணைந்து தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பெருவெள்ளத்தில் மாயமான தமிழர்களை அடையாளம் காண்பதை எளிதாக்கும் வகையில், அவர்களின் முதல் நிலை உறவினர்களுக்குத் தடைய அறிவியல் ஆய்வகங்கள் மூலம் இலவசமாக டிஎன்ஏ பரிசோதனை செய்யத் தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிக்க: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாம்புக்கடி உயிரிழப்புகள்.. 56,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.. அதிர்ச்சித் தகவல்!!
உறவினர்களின் கோரிக்கை:
ஓசூரைச் சேர்ந்த ஹரிணி என்ற பெண், நேபாளத்திற்குச் சென்ற தனது குடும்பத்தினர் வெள்ளத்தில் சிக்கி மாயமானது குறித்து அரசுக்கு அவசரக் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அதில், நேபாள காவல்துறையின் வழிகாட்டுதலின்படி டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்காக உள்ளூர் காவல் நிலையங்களை அணுகியபோது எஃப்.ஐ.ஆர் இல்லாததால் பரிசோதனை செய்ய மறுக்கப்பட்டதாகவும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சுமார் 35-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு தற்போது தடையில்லாமல் டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
3 முக்கிய நகரங்களில் இலவச டிஎன்ஏ மையங்கள்:
நேபாள அரசின் நிலையான வழிகாட்டுதல்களின்படி, மாயமானவர்களை விரைவாக அடையாளம் காண ஏதுவாகக் காணாமல் போனவர்களின் முதல் நிலை உறவினர்களான தாய், தந்தை, மகன் அல்லது மகள் ஆகியோர் கட்டணமின்றி டிஎன்ஏ பரிசோதனை செய்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காகச் சென்னை (மயிலாப்பூர்), மதுரை (கலெக்டர் சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகம்) மற்றும் தஞ்சாவூர் (பிள்ளையார்பட்டி, வல்லம் ரோடு) ஆகிய 3 மண்டலங்களில் செயல்படும் தடைய அறிவியல் ஆய்வகங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் வெட்டிக்கொலை.. சகோதரர் காவல் நிலையத்தில் சரண்.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி!
மீட்புப் பணிகளின் தற்போதைய நிலை:
தமிழ்நாட்டிலிருந்து நேபாளத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்களில் தரவுகளின்படி 305 நபர்கள் பயணம் மேற்கொண்டது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் தீவிர முயற்சிகள் மூலம் 220 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மீதமுள்ள 85 நபர்களைத் தொடர்ந்து தொடர்புகொள்ளவும், அவர்களை விரைவாக மீட்கவும் தமிழ்நாடு அரசின் மீட்புக் குழுவினர் நேபாள மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் இணைந்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.