அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் வெட்டிக்கொலை.. சகோதரர் காவல் நிலையத்தில் சரண்.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி!
AIADMK former minister son murder: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் அ.வெங்கடாசலத்தின் மகன் ராஜராஜன் சொத்து தகராறு காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர கொலையில் ஈடுபட்ட அவரது சகோதரரும், அதிமுக நிர்வாகியுமான ராஜபாண்டியன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
புதுக்கோட்டை, செப்.04: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் சொத்து தகராறு காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கிடையே நீண்ட நாட்களாகப் புகைந்து கொண்டிருந்த குடும்பச் சொத்துப் பிரச்சினையே இந்தத் துயரச் சம்பவத்திற்கு முதன்மைச் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
இதையும் படிக்க : தமிழக காவல் துறை ரூ.212 கோடியில் நவீன மயமாக்குதல்.. ரூ.200 கோடியில் புதிய வாகனங்கள்.. முதல்வர் விஜய் வெளியிட்ட மாஸ் அறிவிப்புகள்!
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அ.வெங்கடாசலம் என்பவர் கடந்த 2010-ஆம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். மறைந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்திற்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், ஒரு மனைவியின் மகன் ராஜபாண்டியன் அதிமுகவில் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். மற்றொரு மனைவியின் மகனான ராஜராஜன் விவசாயம் செய்து வந்தார். குடும்பத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிக்கப்பட்டு விட்ட போதிலும், ராஜராஜனுக்கு ஒதுக்கப்பட்ட சொத்தில் அவரை ஈடுபட விடாமல் ராஜபாண்டியன் தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
நீண்ட நாட்களாக தொடர் மோதல்:
இந்த சொத்துப் பிரச்சினை காரணமாக இரு தரப்பிற்கும் இடையே நீண்ட நாட்களாகவே தொடர் மோதல்களும் வாக்குவாதங்களும் நிலவி வந்தன. ஒருகட்டத்தில் ராஜராஜன் வசித்து வந்த வீட்டை ராஜபாண்டியன் பூட்டிவிட்டதால், ராஜராஜன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பல நாட்கள் வீட்டின் வாசலிலேயே தங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. அதன்பின்னர் கடந்த சில மாதங்களாக உறவினர் வீட்டில் தங்கி வந்த ராஜராஜன், மீண்டும் தனது வீட்டிற்கு வந்தபோது ஆத்திரமடைந்த ராஜபாண்டியன் அவரை அரிவாளால் விரட்டி விரட்டி வெட்டியுள்ளார்.
இதையும் படிக்க: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாம்புக்கடி உயிரிழப்புகள்.. 56,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.. அதிர்ச்சித் தகவல்!!
சிலிண்டரை தலையில் போட்டு கொலை:
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அருகிலிருந்த ஒரு வீட்டிற்குள் தப்பி ஓடிப் பதுங்கிய ராஜராஜனை விடாமல் துரத்திச் சென்ற ராஜபாண்டியன், கத்தியால் குத்தியதுடன் அங்கிருந்த சிலிண்டரைத் தூக்கி அவரது தலையில் போட்டு கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது ராஜராஜன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தார். இச்சம்பவத்தைக் கண்டித்து பட்டுக்கோட்டை – புதுக்கோட்டை சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, கொலையில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி ராஜபாண்டியன் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் நேரில் சென்று சரணடைந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.