தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகக் கனவு.. புனித ஜார்ஜ் கோட்டை முதல் ஓமந்தூரார் வரை.. தோன்றி மறைந்த வரலாற்றுப் பின்னணி!!
Tamil Nadu New Secretariat Plans: தமிழ்நாட்டில் 1,200 கோடி ரூபாய் செலவில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், புனித ஜார்ஜ் கோட்டையின் வரலாற்றுப் பின்னணியையும், கடந்த காலங்களில் அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டு கைவிடப்பட்ட சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்வுகளையும் விவரிக்கும் சிறப்பு செய்தித் தொகுப்பு.
சென்னை, செப்.04: தமிழ்நாட்டில் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த காலங்களில் தமிழ்நாட்டுக்கென தனியாகப் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதற்கு எப்போதெல்லாம் முயற்சிகள் எடுக்கப்பட்டன, அவை எவ்வாறு மாற்றங்களைச் சந்தித்தன என்பது குறித்த வரலாற்று விவாதங்கள் மீண்டும் மேலெழுந்துள்ளன. பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டின் நிர்வாக மையமாகத் திகழும் புனித ஜார்ஜ் கோட்டையின் இட நெருக்கடி மற்றும் பராமரிப்புச் சூழல்களே இத்தகைய புதிய திட்டங்களுக்கான முதன்மைச் சிந்தனையாக இருந்து வருகின்றன.
இதையும் படிக்க: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாம்புக்கடி உயிரிழப்புகள்.. 56,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.. அதிர்ச்சித் தகவல்!!
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான வளாகம்:
வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையானது 1639–40 ஆம் ஆண்டுகளில் கிழக்கிந்தியக் கம்பெனியால் கட்டப்பட்டதிலிருந்து ஆங்கிலேயரின் முக்கிய நிர்வாக அலுவலகமாகச் செயல்பட்டு வந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் மதராஸ் மாகாணத்தின் முதன்மை நிர்வாக மையமாக இயங்கிய இக்கோட்டையில், முதன்முறையாக 1921-ஆம் ஆண்டில் மதராஸ் மாகாணச் சட்டப்பேரவை கூடியது. சுதந்திரத்திற்குப் பிறகும், ஒரு சில விதிவிலக்கான தருணங்களைத் தவிர்த்து, தமிழ்நாடு சட்டமன்றமும் தலைமைச் செயலகமும் தொடர்ந்து புனித ஜார்ஜ் கோட்டையிலேயே இயங்கி வருகின்றன. இருப்பினும், இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான இக்கோட்டை வளாகத்தில், தமிழ்நாடு அரசு தனக்குத் தேவையான கட்டடப் பகுதிகளைப் பயன்படுத்தி வருவதற்கு ஆண்டுதோறும் ராணுவ அமைச்சகத்திற்குக் குத்தகைத் தொகையை வழங்கி வருகிறது. இதனால் ஏற்படும் நிர்வாகச் சவால்கள் மற்றும் தீவிர இட நெருக்கடியைக் கருத்தில் கொண்டே புதிய தலைமைச் செயலகத்தை அமைக்கும் முயற்சிகள் தொடங்கின.
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா எடுத்த முயற்சிகள்:
கடந்த 2001–2006 ஆம் காலகட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டத் திட்டமிடப்பட்டது. ஆனால், மாணவர்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகள் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காகப் பூமி பூஜையும் செய்யப்பட்டது. எனினும், அடுத்து வந்த திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய திட்டம் கைவிடப்பட்டு, அந்த இடம் மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கே திருப்பியளிக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் கலைஞர் எடுத்த முயற்சிகள்:
இதன் தொடர்ச்சியாக, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பிரம்மாண்டமான முறையில் புதிய தலைமைச் செயலகம் கட்ட அப்போதைய முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு திட்டமிட்டு, 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அக்கட்டடம் முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. ஆனால், 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், தலைமைச் செயலகம் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்பட்டது. ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடம், பொதுமக்களுக்கான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுச் செயல்படத் தொடங்கியது.
இதையும் படிக்க : தமிழக காவல் துறை ரூ.212 கோடியில் நவீன மயமாக்குதல்.. ரூ.200 கோடியில் புதிய வாகனங்கள்.. முதல்வர் விஜய் வெளியிட்ட மாஸ் அறிவிப்புகள்!
தவெக ஆட்சியில் வெளியான புதிய அறிவிப்பு:
கடந்த 2021-ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, தலைமைச் செயலகம் மீண்டும் ஓமந்தூரார் தோட்டத்திற்கு மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவினாலும், எந்த மாற்றமும் செய்யப்படாமல் தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தொடர்ந்து இயங்கி வந்தது. இத்தகைய சூழலில் தான், தற்போது தவெக ஆட்சியில் சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்ற புதிய அறிவிப்பு வெளியாகிப் பெருத்த கவனத்தைப் பெற்றுள்ளது.