தூத்துக்குடியில் பயங்கரம்.. வீட்டிற்குள் புகுந்து புதுமாப்பிள்ளைக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. முன்விரோதமா? போலீசார் விசாரணை!
Thoothukudi Crime : தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம கும்பல் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த புது மாப்பிள்ளைய அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி விட்டு தப்பி ஓடியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பகுதியில் உள்ள பெரிய தெப்பக்குளம் அருகே உள்ள வழக்கு ரத வீதியை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் முத்து கணேசன் ( 29 வயது). இவர், எட்டயபுரம் அருகே உள்ள நாவலக்கம்பட்டி சாலையில் அமைந்துள்ள தனியார் சோலார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மகேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், முத்து கணேசன் தினம்தோறும் பிற்பகலில் உணவு அருந்துவதற்காக வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி, சம்பவத்தன்று பிற்பகல் அவர் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, முகமூடி அணிந்தவாறு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கண் இமைக்கும் நேரத்தில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது.
புதுமாப்பிள்ளைக்கு வீடு புகுந்து அரிவாள் வெட்டு
இதில், பலத்த வெட்டு காயம் அடைந்த முத்து கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை பார்த்த அவரது மனைவி மகேஸ்வரி சத்தம் போட்ட நிலையில், அந்தப் பகுதியில் பாம்பு பிடிப்பதற்காக சென்றிருந்த தீயணைப்பு படை வீரர்கள் முத்து கணேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் முதுலுதவி அளித்த நிலையில், தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, முத்து கணேசன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க: தென்காசியில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய லைன்மேன்… பொறி வைத்து தூக்கிய ஊழல் தடுப்பு போலீஸ்!




கோவில்பட்டி- விளாத்திகுளம் சாலையில் மறியல் போராட்டம்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்து கணேசன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோவில்பட்டி- விளாத்திகுளம் பிரதான சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி முழக்கங்களை எழுப்பினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதி அளித்த நிலையில், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.
பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக முத்து கணேசன் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், முன் பகையின் காரணமாக கொலை வெறி தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பன உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: சேலத்தில் பேரதிர்ச்சி.. கிணற்றில் மிதந்த 7 மாத கர்ப்பிணியின் சடலம்… மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் போலீசார்!