தூத்துக்குடியில் பறவைகள் சீசன் தொடக்கம்.. பெருங்குளத்திற்கு முன்கூட்டியே வருகை தந்த வலசைப் பறவைகள்!
Migratory Waterbirds: தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் ஈரநிலப் பகுதிக்கு வழக்கமான பருவக்காலத்திற்கு முன்னதாகவே ஏராளமான வலசைப் பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. ஆர்க்டிக் மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்துள்ள பறவைகளின் வருகை குறித்து முத்து நகர் இயற்கை அறக்கட்டளையின் பறவை ஆராய்ச்சியாளர் தாமஸ் மதிபாலன் பகிர்ந்துள்ள முக்கியத் தகவல்கள் இதோ.
தூத்துக்குடி, செப்.02: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் பெருங்குளம் ஈரநிலப் பகுதி, சர்வதேச அளவில் பறவைகள் தங்கிச் செல்லும் மிக முக்கியமான மையமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தை முன்னிட்டு உலகின் பல்வேறு தொலைதூர நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான நீர்வாழ் வலசைப் பறவைகள் இங்கு வருவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு வழக்கமான சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே பெருங்குளம் நீர்நிலைகளுக்கு வெளிநாட்டுப் பறவைகள் திரளாக வருகை தரத் தொடங்கியிருப்பது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பறவை பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குவியும் வெளிநாட்டு விருந்தினர்கள்:
வட ஐரோப்பா, சைபீரியா, மத்திய ஆசியா மற்றும் ஆர்க்டிக் பகுதிகள் உள்ளிட்ட கடும் பனிப்பொழிவு நிலவும் இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் வான்வழியாகப் பயணித்து பல்வேறு வகையான நீர்ப்பறவைகள் தூத்துக்குடி பெருங்குளம் பகுதியை வந்தடைந்துள்ளன. இங்கு நிலவும் சாதகமான தட்பவெப்ப நிலை, பறவைகளுக்குத் தேவையான போதிய உணவு ஆதாரம் மற்றும் பாதுகாப்பான சூழல் காரணமாகவே இவை ஆண்டுதோறும் இங்கு வருகின்றன. தற்போது வந்துள்ள பறவைகளின் எண்ணிக்கையும், அவற்றின் பல்வேறு இனங்களின் வருகையும் இப்பகுதியின் இயற்கை சமநிலையைக் காட்டுவதாக அமைந்துள்ளதாகக் கள பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
