சேலத்தில் பேரதிர்ச்சி.. கிணற்றில் மிதந்த 7 மாத கர்ப்பிணியின் சடலம்… மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் போலீசார்!
Salem Pregnant Woman Body Recovered : சேலத்தில் காணாமல் போன 7 மாத கர்ப்பிணி பெண் விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு மர்மமான முறையில் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள கோண சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பேராக் கவுண்டர். இவரது மகள் கோகிலா ( 23 வயது). இவர், படித்து முடித்துள்ள நிலையில் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 20- ஆம் தேதி கோகிலா திடீரென வயிறு வலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, அவரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விவசாய கிணற்றில் மீட்கப்பட்ட கர்ப்பிணி சடலம்
இதில், கோகிலாவின் கர்ப்பத்துக்கு காரணமான கன்னியாம்பட்டியை சேர்ந்த மாரி என்பவரின் மகன் அம்மாசியை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவருடன் கோகிலாவை குடும்பம் நடத்துமாறு கடந்த ஆகஸ்ட் 26- ஆம் தேதி போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், வெள்ளாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் கோகிலா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. அவரது சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: செய்வினையால் வந்த வினை.. கிருஷ்ணகிரியில் மூதாட்டியை திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய சகோதரிகள்.. போலீசாரிடம் பகீர் வாக்குமூலம்!




மகள் காணாமல் போனதாக தந்தை புகார்
மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 31- ஆம் தேதி கோகிலா காணாமல் போனதாக அவரது தந்தை பேராக் கவுண்டருக்கு, அம்மாசி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பகுதி முழுவதும் தேடிய நிலையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், இது தொடர்பாக பேராக் கவுண்டர் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் கோகிலாவை தேடி வந்த நிலையில், அவர் விவசாய கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
கொங்கணாபுரம் போலீசார் விசாரணை
இதில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கோகிலாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால், அவரை யாரேனும் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் போட்டிருக்கலாமா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கொங்கணாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் 7 மாத கர்ப்பிணி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தென்காசியில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய லைன்மேன்… பொறி வைத்து தூக்கிய ஊழல் தடுப்பு போலீஸ்!