AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புனித ஜார்ஜ் கோட்டைக்கு ‘குட்-பை’.. ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!!

New Secretariat in Chennai: சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புனித ஜார்ஜ் கோட்டை பாரம்பரிய சின்னங்களாகப் பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புனித ஜார்ஜ் கோட்டைக்கு ‘குட்-பை’.. ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 03 Sep 2026 11:14 AM IST

சென்னை, செப்.03: 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,200 கோடியில், புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். நவீன வசதிகளுடன், மாற்றுத் திறனாளிகள் சென்று வரும் வகையிலும் இந்த புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்ததாவது, தமிழ்நாட்டின் நிர்வாக மையமாகவும், மாநிலத்தின் ஆட்சிப் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் திகழ்ந்து வரும் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலிருந்து, எதிர்கால நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலகத்திற்கு மாறத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இதையும் படிக்க: டாஸ்மாக் கடைகளில் ரூ.10 கூடுதல் வசூல்.. ஒரே நாளில் 67 ஊழியர்கள் சஸ்பெண்ட்.. அமைச்சர் அதிரடி!

ஜார்ஜ் கோட்டையில் இடபற்றாக்குறை:

கிழக்கிந்தியக் கம்பெனியால் 1640-ல் வாங்கப்பட்டு, 1644-ல் கட்டி முடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டை வளாகம், சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சுமார் 107 ஏக்கர் பரப்பளவு கொண்ட இவ்வளாகத்தில், தமிழ்நாடு அரசின் பயன்பாட்டிற்காக நான்கு ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே உள்ள நிலையில், மீதமுள்ள நிலங்கள் இந்தியப் பாதுகாப்புத் துறை மற்றும் இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால் இடப்பற்றாக்குறையைச் சமாளிக்கவும், விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவும் முடியாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில், விரிவடைந்து வரும் மாநில அரசின் நிர்வாகத் தேவைகளையும் எதிர்கால சவால்களையும் கருத்தில் கொண்டு, புதிய தலைமைச் செயலகம் அமைப்பதன் அவசியத்தை முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் விரிவாக எடுத்துரைத்தார்.

உலகத் தரத்திலான புதிய தலைமைச் செயலகம்:

தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடம் மற்றும் 1978-ல் கட்டப்பட்ட 10 தளங்களைக் கொண்ட கவிஞர் மாளிகை ஆகியவற்றில் 30-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளில் அரசுத் துறைகளின் பொறுப்புகளும் ஊழியர்களின் எண்ணிக்கையும் பெருமளவு உயர்ந்தபோதிலும், கோட்டை வளாகத்தில் போதிய இடவசதி இல்லாததால் உட்கட்டமைப்பை மேம்படுத்த முடியாத தேக்கநிலை உருவாகியுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக, அடுத்த நூற்றாண்டின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், உலகத் தரத்திலான பொது நிர்வாக உட்கட்டமைப்பைக் கொண்ட ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் சென்னையில் உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

ஜார்ஜ் கோட்டை வரலாற்று சின்னமாக பாதுகாக்கப்படும்:

ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள இந்தப் புதிய வளாகத்தில், அனைத்து அரசுத் துறைகளும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. இதில் நவீன மாநாட்டு அரங்குகள், போதுமான வாகன நிறுத்துமிடங்கள், பொதுமக்கள் சேவை மையங்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வசதிகள், நவீன தீயணைப்பு ஏற்பாடுகள் மற்றும் பசுமைக் கட்டிடத் தரநிலைகளுக்குட்பட்ட சர்வதேச உள்கட்டமைப்புகள் அமைக்கப்படவுள்ளன. அதேவேளையில், தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரியக் கட்டிடங்கள் வரலாற்று மரபுச் சின்னங்களாகத் தொடர்ந்து பேணிப் பாதுகாக்கப்படும் என்றும், அவற்றின் வரலாற்று மதிப்பை வருங்கால தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சரிவை நோக்கி தமிழ்நாட்டின் GST வருவாய்.. ரூ.140 கோடி குறைந்து பின்னடைவு.. என்ன செய்யப்போகிறது அரசு?

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், திறம்படச் செயல்படும் நிர்வாக அமைப்பை உருவாக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரூ.1,200 கோடி திட்டமானது, தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

Follow Us